குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்! நாமல் குற்றச் சாட்டு

அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு அமைவாகவே பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
விசாரணை கட்டமைப்புக்களை அரசியல் தலையீடுகள் ஆக்கிரமித்துள்ள நிலையில்,நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகிறது. விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் நோக்கங்களுக்காக கீழ்த்தரமாக செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு அமைவாகவே பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகள் சுயாதீன பொலிஸ் சேவையை மலினப்படுத்துவதாகும். கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையின் சந்தேக நபரான செவ்வந்தி கைது செய்யப்பட்டமை சிறந்தது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக் குழுக்களின் பின்னணியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அனைத்து விடயங்களுடனும் ராஜபக்ஷர்களை தொடர்புப்படுத்துவது முறையற்றது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு அரசாங்கம் செயற்படுகிறது.
எம்மை விமர்சித்துக் கொண்டு இருக்காமல் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



