இஷாரா செவ்வந்தி எப்படி சிக்கினார்? 50 இலட்சம் கையூட்டல்! நிராகரித்த பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகல

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தின் நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.
நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தின் திப்பஸ் பார்க் பகுதியில் உள்ள ஆடம்பர இல்லமொன்றில் பதுங்கியிருந்த போது, அவர் கைதானார். இவருடன் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளடங்களாக மேலும் நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்) பரிசோதகர் கிஹான் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர், மூன்று நாட்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், நேபாள காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறை ஆகியவற்றின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (11) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட விதம்
'கெஹெல்பத்தர பத்மே' யிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த இடம் உறுதி செய்யப்பட்ட பின்னரே, ரோஹான் ஒலுகலவின் தலைமையில் சுற்றிவளைப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக் காவல்துறை அதிகாரிகள் காத்மாண்டு நகருக்குச் சென்று நேபாள காவல்துறையைச் சந்தித்த பின்னர், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டிலேயே தங்கி விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையைத் தொடங்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒலுகல குழுவினர், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான 'ஜே.கே. பாய்' என்று அழைக்கப்படும் கென்னடி பெஸ்தியன் பிள்ளை என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி இருந்த இடம் உறுதியான பின், நேபாள காவல்துறையின் உதவியுடன் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.
தம்மைக் கைது செய்ய வந்த ரொஹான் ஒலுகலவைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போன இஷாரா, "ஒலுகல சேர்!" என்று கூற, அதற்கு அவர் "ஆ... பிள்ளையே, எப்படி இருக்கிறாய்?" என்று பதிலளித்துள்ளார்.
என்றாவது ஒரு நாள் ஒலுகலவினால் தாம் கைது செய்யப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கித் தவிப்பதை விட, இலங்கைக்குச் செல்வது சுகம் என்றும், ஆனால் காவல்துறையில் சிக்குவோம் என்ற பயத்தினால் அங்கேயே தங்கியிருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
வேறு மூன்று சந்தேகநபர்கள் கைது இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 'கெஹெல்பத்தர பத்மே' குழுவுடன் தொடர்புடைய மேலும் இரண்டு குற்றக்குழு உறுப்பினர்களும் பெண் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
அதன்படி, காத்மண்டு நகரில் வேறொரு இடத்தில் மறைந்திருந்த அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். அங்கு வைத்து 'பத்மே' குழுவின் முக்கிய உறுப்பினரான 'கம்பஹா பபா' என்பவர், தம்மை விடுவிப்பதற்காக ரொஹான் ஒலுகலவுக்கு 50 இலட்சம் ரூபா கையூட்டல் கொடுக்க முயன்ற போதும், அந்த யோசனையை நிராகரித்த ஒலுகல, மூவரையும் கைது செய்துள்ளார்.
சாவகச்சேரி பெண் தக்ஷி கைது செய்யப்பட்ட மற்றைய பெண்,
சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்றும், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணின் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்தி, இஷாரா செவ்வந்திக்கு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கவும், அதன் மூலம் அவரை ஐரோப்பாவிற்குத் தப்ப வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
பின்னணி
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து குற்றக்குழு உறுப்பினர் 'கணேமுல்லை சஞ்சீவ' சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
'கெஹெல்பத்தர பத்மே'யின் கட்டளைக்கு அமைய, அவரது குழுவின் மூளையாகக் கருதப்படும் முன்னாள் கொமாண்டோ சிப்பாய் ஒருவரே (கொமாண்டோ சலிந்து), சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இஷாரா செவ்வந்தியும் சட்டத்தரணி வேடத்தில் அங்கு சென்று இந்தக் கொலையை வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொலைக்குப் பின்னர் 'கொமாண்டோ சலிந்து' மன்னார் நோக்கிச் செல்லும் போது புத்தளம், பாலாவியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படார். எனினும், இஷாரா செவ்வந்தியை மட்டும் உடனடியாகக் கைது செய்ய முடியவில்லை.
கொலை நடந்து 17 நாட்களுக்குப் பிறகு இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து நேபாளத்துக்கு சென்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



