திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் நாளை மீண்டும் திறப்பு!
யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

அதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 2022இல் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் மறுநாளே மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள், கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை. அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும்.
விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இந்த வியாபார நிலையத்தை நோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்தின் பின் இந்த பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
