தமிழ் மக்களை ஏமாற்றும் அரசாங்கம் - சாணக்கியன் காட்டம் (வீடியோ இணைப்பு)

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தெராடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகியுள்ளது.
ஜனாதிபதியின் பதவி காலத்தில் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த ஒருவருட காலத்தில் தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை. திருப்தியடையும் ஒரு தீர்வை கூட அரசாங்கம் முன்வைக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும். ஜனாதிபதியின் பதவி காலத்தில் ஒருவருடம் நிறைவடையும் போது ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று எவரும் கேள்வி கேட்க கூடாது என்பதற்காகவே இம்மாதம் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் அவசர அவசரமாக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அவமானப்பட கூடாது என்பதற்காகவே அவசரமாக ஒருசில அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கூட மேற்கொள்ளவில்லை.காணி விடுவிப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை
. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை.அத்துமீறிய மேய்ச்சல்காரர்கள் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தீர்வு காணுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம். இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பதாக வாயால் குறிப்பிடப்படுகிறது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. வளவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக சுற்றாடல் துறை அமைச்சர் வடக்குக்கு வந்து குறிப்பிட்டார்.
மூன்று மாதங்கள் கடந்தும் ஏதும் நடக்கவில்லை. எமது மக்கள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு உள்ளானார்கள் .இதற்கு இந்த அரசாங்கம் வழங்கிய பதிலை எம்மால் ஏற்க முடியாது.யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மைதான காணியில் இருந்து ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.செம்மணி விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு நடத்துவதாக ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டார்கள்.
தற்போது 2026 என்று குறிப்பிடுகிறார்கள். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி எவ்வித பேச்சுவார்த்தையும் எடுக்கப்படவில்லை.
எமது மக்கள் கடந்த காலங்களை காட்டிலும் தற் போது பாதிக்கப்பட்டுள்ளார்கள்.கடந்த கால ஆட்சியாளர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்று வெளிப்படையாக குறிப்பிட்டார்கள். ஆனால் நீங்கள் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளீர்கள். இதனை தொடர்ச்சியான ஏற்க முடியாது என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



