மன்னார் காற்றாலை நிறுவுதல்: பணிகளை தொடரவும் ஜனாதிபதி உத்தரவு

மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
அது தொடர்பில் அரசினதும் ஜனாதிபதியினதும் தீர்மானம் அடங்கிய அறிவுறுத்தல் பெரும்பாலும் இன்று மன்னார் செயலகத்துக்குக் கிடைக்கும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் காற்றாலைகளை அமைக்கும் பணிக்கு எதிராக மன்னாரில் பொதுமக்கள் மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சு நடத்தி விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசமும் அவரினால் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகத் தொடர்ந்து நேற்று 51 ஆவது நாளாகப் பொது அமைப்புகள் தமது எதிர்ப்பைக் காட்டிப் போராடி வருகின்றன. இந்தநிலையில் திட்டமிட்டபடி 14 காற்றாலைகளையும் அமைக்கும் பணியை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நாட்டை விட்டு புறப்படும் முன்னர் ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியிருந்தார் எனத் தெரியவருகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



