கிளிநொச்சிக்கு மகாவலி சாத்தியமா?

#SriLanka #Kilinochchi #water #Lanka4
Mayoorikka
2 hours ago
கிளிநொச்சிக்கு மகாவலி சாத்தியமா?

நீரின்றி அமையாது உலகு என்கின்ற வள்ளுவனின் வாக்குக்கு அமைய நீரின்றி வளராது வடக்கு. வடக்குக்கு இருக்கின்ற ஒட்டுமொத்த நீர்த் தேவையும் சிலர் யாழ்ப்பாணத்திற்கு இருக்கின்ற குடிநீர் தேவையாகச் சுருக்கி நமது விவசாயத்தையும் முன்னேற விடாது தடுக்கின்றனர். 

நமது நீர் வளம் நமக்குப் போதுமானது என்று வாதம் செய்கின்றார்கள். யாழ்ப்பாணத்தின் நீர்ப் பிரச்சனையைப் பற்றிப் பேசுகின்றவர்கள் உண்மை என்ன என்பதை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும்.

 பொதுவாக வடக்கின் பல பாகங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு போவது அனைவரும் அறிந்தது. 

அதிலும் யாழ்ப்பாணத்தில் நீரானது மாசுபட்டுக் கொண்டு செல்வது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அது பாவனைக்கு உதவாத அளவிற்கு மாற்றம் அடையும் என்பது வல்லுனர்களின் கருத்து. இப்படிக் கருத்தைக் கூறும் வல்லுநர்கள் அதற்கான தீர்வாக வடக்கில் இருக்கின்ற சில குளங்களில், ஆறுகளில் இருந்து நீரை எடுத்துப் பாவிக்கலாம் என்கின்ற முன்மொழிவைத் தீர்வாக வைக்கின்றார்கள். 

 படித்த இந்தக் கனவாங்கள் வடமாகாணத் தேவைக்கு எத்தனை கனமீற்றர் நீர் தேவை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் இவர்கள் முன்மொழியும் தீர்வின் பற்றாக்குறை தெள்ளெனவே பாமரர்க்கும் விளங்கி விடும்.

images/content-image/1758599541.jpg

 என்னைப் பொறுத்தவரையில் இது தீர்வு இல்லை என்பதும், அதேவேளை இந்த நீரை நாம் நமது தேவைகளுக்காகப் பயன்படுத்தும் பொழுது நமது கடல் வளம் பாதிக்கப்படும் என்பதையும், தெளிவாக எனது வேறு கட்டுரையொன்றில் விளங்கப்படுத்தி உள்ளேன்.

 வடக்கிலே இருக்கின்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரை நம்பி உள்ளபடியாலும், போதிய நீர் வளம் இல்லாத காரணத்தாலும் பெரும் போகம் முடிந்த பின்னே வெறும் தரிசு நிலங்களாக இருக்கின்றன. 

 குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் நெற்பயிர் உட்பட சிறுதானியங்கள் வரைக்கும் சிறு போகத்தில் கேள்விக்குறியாகவே உள்ளன. இங்கே ஒரு லட்சம் ஏக்கர் என்பது ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் விளைநிலம் என்று பார்த்தால் கூட 25,000 குடும்பங்கள் இங்கே வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். 

 பெரும் போகத்தில் நல்ல விளைச்சல் இல்லை என்று சொன்னால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறி தான்? இதன் காரணமாகவே இன்று பலர் முழு நேர விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றது மட்டுமல்லாமல் அவர்களுடைய சந்ததியும் அதை தொடரக்கூடாது என்று நினைக்கின்றார்கள். இந்த நிலையை தொடர அனுமதித்தால் எமது பகுதிகளில் விவசாயம் என்பதே கேள்விக்குறியாகி விடும்.

images/content-image/1758600102.jpg

 இதற்கெல்லாம் நாம் மழையை நம்பி இருப்பது மட்டுமல்ல, மழைக்காலத்தில் தேக்கி வைக்கும் நீரால் எம்மால் போதுமான அளவில் விளைநிலங்களுக்கு நீர் வழங்க முடிவதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்பதைத் தாண்டிப் பல மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பலரும் சிந்திக்க மறுக்கிறார்கள். 

உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டம்.இங்கே நீர்ப்பாசன வசதி இல்லாமல் 3400 ஹெக்டேயர் விளைநிலம் தரிசாகக் கிடக்கிறது. இங்கு 4 பிரதான குளங்களும், 15 நடுத்தரக் குளங்களும், 192 சிறிய குளங்களுமாக 211 குளங்கள் காணப்படுகின்றன. 

 மக்கள் பிரதானமாக விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டதால் மழை நீரைக் கொண்டு 3,893 ஹெக்ரெயரில் பெரும்போகத்தையும், குளத்து நீரைக்கொண்டு 455.5 ஹெக்ரெயரில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள குளங்களில் மிகப்பெரிய குளமாக கட்டுக்கரைக் குளம் திகழ்கின்றது. 

 இக்குளத்தில் காலபோகத்தில் 30,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அண்ணளவாக 11,000 விவசாயிகளுக்கு #ஜீவனோபாயமாக இக் குளம் உள்ளது. ஆனால் சிறுபோகத்தில் 3,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நீரை மட்டும் தேக்க முடிகின்றது. அதன் மூலம் அண்ணளவாக 2500 விவசாயிகளே பயன்பெறுகின்றனர். 

 ஏனைய 8500 விவசாயிகள் சிறுபோகத்தில் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகின்றது. இதேபோல் கிளிநொச்சியிலும் இதே நிலைமைதான். கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போகத்தில்(#காலபோகத்தில்) சுமார் 76000 ஏக்கரும், சிறப்பாக மழை பெய்து குளங்கள் நிறைந்தால் சிறு போகத்தில் வெறும் 30,000 ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. இதனால் சராசரியாக 46,000 ஏக்கர் நெல் வயல்கள் #தரிசாக பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது. 

 கிளிநொச்சி, மன்னார் கட்டுக்கரைக் குளம், முல்லைத்தீவு என இந்த மூன்று இடங்களையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் சிறுபோகத்தில் நீரில்லாமல், செய்கை பண்ணப்படாமல் தரிசாக இருக்கின்ற நிலங்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இந்த ஒரு லட்சம் ஏக்கரிலும் விளையக்கூடிய நெல்லானது சராசரியாக ஏக்கருக்கு 30 மூடை என்று கணக்குப் பார்த்தால் கூட அண்ணளவாக நாம் ஒவ்வொரு ஆண்டும் இழக்கின்ற மொத்த நெல்மூட்டைகளின் உற்பத்தி 30’00’000 (ஒரு போகத்தில் மட்டும்). 30’00’000x75 Kg1/1000= 225 000 மெட்ரிக் தொன். 

இந்தத் தொகையானது மூன்று போகம் என்று வரும் பொழுது இரட்டிப்பாகும் 60,00,000X75=450,000 இதேவேளை மொத்த உற்பத்தியும் மூன்று மடங்காக உயரும். அப்பொழுது எமது மொத்த உற்பத்தியானது 675,000 மெட்ரிக் தொன். 

ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு சராசரி 7500 லீட்டர் தண்ணீர் தேவை. இதற்க்கு தேவையான நீரின் மொத்த அளவு 16875 00 000 000 லீட்டர் தண்ணீர் மேலதிகமாகத் தேவை. இவ்வளவு நீரை எவ்வளவு மழை பெய்தாலும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது அல்லது சேமிக்க முடியாது. ஏன் இங்குள்ள குளங்களில் நீரைத் தேக்கமுடியாத? கேள்வி எழலாம்! குளங்களில் மேலதிகமான நீரைத் தேக்குவதற்கு தரைத்தோற்றமும் அதன் அமைவிடமும் மிக முக்கியம். 

 ஆகவே இதை நாம் பெறுவதற்கான வழியை தேடி எமது தரிசாக கிடக்கும் நிலங்களையும் விளைநிலங்களாக மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு என்ன? இங்கேதான் நாம் சரியாகச் சிந்தித்து நமக்கான நீர் வளத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

 மகாவலி நதிநீர்த் திட்டத்தில் வடக்கிற்கான திட்டமும் ஒன்று. அது தற்பொழுது அனுராதபுரத்தோடு நிறுத்தப் பாட்டிருக்கிறது. அத்திட்டத்தைத் தொடர்ந்து வடக்குக்கு கொண்டு வருவது சாத்தியமா? என்னைப் பொறுத்தவரையில் சாத்தியமில்லை. அதற்க்கு பல சவால்கள் உள்ளன. 

 பெரும் சிக்கல் தமிழ், சிங்களம் என்று இனப்பாகுபாடு இல்லாமல் பல ஆயிரம் ஏக்கர் மக்களின் நிலங்களை அரசு எடுக்க வேண்டி வரும். அப்பொழுது மக்கள் அதை எதிர்ப்பார்கள் அதற்கு எதிராக போராடுவார்கள் வழக்குகளை தொடுப்பார்கள்.

இதனால் எதிர்ப்புக்கள் வர இத்திட்டம் கைவிடப்படும். ஆகவே நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவற்றை விட்டு நடைமுறைக்கு எது இலகுவானதும் சாத்தியப்படக்கூடியதும் என்பதை சிந்தித்து முயற்சிப்போம். மகாவலி நீர்த்திட்டத்தை அனுராதபுரத்தில் இருந்து வீதிகளின் அருகாக எந்தத் தனியாரின் நிலங்களையும் கையகப்படுத்தாமல் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் எந்தவித வீண் விரயமும் இல்லாமல் குழாய்கள் மூலம் வடக்குக்குக் கொண்டு வந்து அதை ஏற்று நீர்ப்பாசனத் திட்டமாக்கி , ஒட்டுமொத்த வடக்குக்கு நிலைங்களையும் பொன்விளையும் பூமி ஆகவேண்டும். அப்பொழுது நாம் இரண்டு போகமல்ல, மூன்று போகங்கள் விளைவிக்கலாம். 

ஒட்டுமொத்த வடக்குக்கும் ஏற்றுநீர்ப் பாசனமாக இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்? அனுராதபுரம் கடல் மட்டத்திலிருந்து 81 மீட்டர் உயரத்தில் உள்ளது. இரணைமடு 31 மீட்டர் உயரத்திலும், முல்லைத்தீவு 37 மீட்டர் உயரத்திலும் யாழ்ப்பாணம் சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும் உள்ளது. 

 ஆகவே அங்கே இருந்து நாம் நீரைப் பாரிய குழாய்கள் மூலம் கொண்டு வந்து, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்துச் சிறு குழாய்கள் மூலம் நமது தேவைக்குப் பயன்படுத்தும் பொழுது அதன் புவிஈர்ப்பு அழுத்தம் காரணமாக வேண்டிய இடங்களுக்குத் தேவையான அளவு நீரை வழங்க முடியும். இது தவிரச் சில குறிப்பிட்ட இடங்களில் மிகப்பெரும் தொட்டிகளை அமைத்துத் தொட்டிகளின் மூலமாகவும் குழாய்களின் மூலமாகவும் நீர்ப்பாசனத்தை முன்னெடுக்க முடியும். 

 இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசு வடக்கை முன்னேற்றும் நோக்கோடு பல நல்ல திட்டங்களை மேற்கொள்கிறது. அதில் குறிப்பிடும் படியாகத் தென்னைச் செய்கையை மேற்கொள்ள இருக்கிறார்கள். இது சுமார் 40,000 ஏக்கர் என்று கூறப்படுகிறது. 

ஒரு தென்னைக்கு ஒரு மாதத்திற்குச் சராசரியாக 2000 லீற்றர் தண்ணீர் தேவை. ஏற்கனவே குழாய்க் கிணறுகள் காரணமாக எமது நீர்மட்டம் மிக ஆழமாகி விட்டது. இதற்கும் தண்ணீரை நாம் எமது நிலத்திலிருந்து உறிஞ்சுவோமாக இருந்தால் நமது நிலத்தடி நீர்மட்டம் ஒரு சில ஆண்டுகளில் அதல பாதாளத்திற்குப் போய்விடுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக் குடிநீருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

 (பெருமளவு தென்னையைப் பயிரிடும் பொழுது மழையை மட்டும் நம்பி இருக்க முடியாது) குழாய்களின் மூலம் கொண்டுவரும் நீரால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தென்னைக்கும் தேவையான நீரை வழங்க முடியும்.

 அதே வேளை இன்னும் பல ஆயிரம் ஏக்கர்களில் சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் பொழுது கால்நடைகளுக்கான தீவனத்தையும், எமது போசாக்கு உணவையும் நிவர்த்தி செய்யலாம். ஆகவே வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம். 

இப்பொழுதே இந்த மகாவலி நீரை வடக்கிற்குக் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டால் வடக்கில் விவசாயம் செழிப்பது மட்டுமல்ல, புதிய தொழிற்சாலைகளும் ,சுற்றுலாத் தலங்களும் மேலதிகமான மின் உற்பத்திக்கும் வழி வகுக்கும். 

 இந்த ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திக் குழாய்களில் வரும் நீரில் இருந்து இடை இடையே மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். இலங்கைப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால் குறிப்பாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். 

 அது வடக்கிற்கு மகாவலியைக் குழாய்களின் மூலம் கொண்டு வந்து நெற்பயிர்ச் செய்கையோடு சோளம், மற்றும் சிறுதானியங்கள், தென்னை என்று நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையையும் நிறைவேற்றலாம். இதைவிட இன்னும் சிறப்பு என்னவென்றால் குழாய்கள் மூலம் கொண்டு வருகின்ற நீரைப் பல குளங்களுக்கு நிரப்புவதன் மூலம் அந்தக் குளங்களிலும் நன்நீர் உணவு வகைகளை (மீன்,,நண்டு, இறால்) வளர்ப்பதன் மூலம் மேலும் பெரிதான ஒரு வருமானத்தைப் பல கிராமங்களும் ஈட்ட முடியும். இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

இந்தக் கருத்தோடு உடன்படுகின்றவர்கள் தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து நாட்டின் வளத்திற்கும், நமது வளர்ச்சிக்கும் ஆதரவு தருமாறு மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். உலகில் ஓடுகின்ற பல நதிகளும் பல நாடுகளைக் கடந்து செல்வது மட்டுமல்ல அந்தந்த நாடுகளின் தேவைகளையும் நிறைவு செய்கின்றது. பகையான நாடுகள் கூட நீரை பகிர்ந்து கொள்ளுகின்றன இதற்கெல்லாம் பொதுவான ஒப்பந்தங்கள் உதவியாக இருக்கிறது.

 இப்படியான ஒரு திட்டத்தை இதுவரைக்கும் எந்த ஒரு அமைப்போ , தலைவரோ முன் வைக்கவில்லை. இத்திட்டத்தை நாட்டு மக்களின் நலனிலும், அவர்களின் பொருளாதாரத்திலும், அக்கறையுள்ள தலைமையோ அல்லது அமைப்போ அரசிடம் கொண்டு செல்லும் பட்சத்தில் அரசு இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளும். 

 ஒரு முகநூல் போராளியாகத் தனி மனிதனாக என்னால் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஒரு விடயத்திற்கு வித்திடுவது என்பது ஒரு தனி மனிதன் என்கின்ற வகையில் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன்.

 இங்கே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் கிளிநொச்சியை தவிர இணையதளங்களின் மூலம் பெறப்பட்டவை. ( கிளிநொச்சி தகவல்களை தந்துதவியது மதிப்பிற்குரிய ஐயா சிவமோகன். விவசாயிகள் சங்கங்களின் தலைவர்) துறைசார் நிபுணர்களிடம் இருந்து என்னால் முழுமையான தகவல்களை பெற முடியாத காரணத்தால் கிடைத்த தகவல்களைக் கொண்டு எனது சிந்தனையை எழுத்தாக்கி உள்ளேன். 

images/content-image/1758600154.jpg

 ஆகவே துறைசார் வல்லுனர்கள் இதை விமர்சிப்பதற்கு பதிலாக சரி செய்து செயல் வடிவம் கொடுத்து மக்களுக்கும் நாட்டுக்கும் உங்களது அறிவை பயன்படுத்துங்கள்.

 மிக்க நன்றி 

கிளிநொச்சி மண்ணின் முன்னாள்  

பயிர்த்தொழிலாளன் பரமேஸ்வரன் சுதாகர். சுவிட்சர்லாந்து.

 Email: sutha.eatham@gmail.com T.P : +41 79 554 33 31 (WhatsApp)


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!