பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பேரணி

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 80 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையில் பெரியார் அமைப்பு சார்பில் ஒரு மெகா பேரணி நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றிமாறன், “எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அந்த ஒடுக்குமுறைகளால் கொல்லப்படுகிறார்களோ, அங்கெல்லாம் நாம் ஆதரவாக நிற்பது ஒரு மனிதனின் பொறுப்பு. பாலஸ்தீனத்தில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலை. அங்கிருக்குற மக்கள், பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் அடைக்கலம் ஆகியிருக்கிறார்கள் என தெரிந்து குண்டுகள் வீசப்படுகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, அவங்களுக்கு ஆதாரமாக இருக்குற மரங்களை அழிக்கப்படுகிறது. இதை ரொம்ப காலமாகவே செய்து கொண்டு வருகிறார்கள். இப்போது ஒரு தீர்மானமாக செயல்படுகிறார்கள். காசா தற்போது பஞ்ச பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பேரில் ஒரு குழந்தை பசியால் சாவது தான் பஞ்சத்துக்கான அடையாளமாக சொல்வார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் வெளியே இருக்கிறது. ஆனால் காசா பகுதிக்குள் அனுமதிக்க மறுக்கப்படுகிறது. இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டிப்பது நமது எல்லாருடைய கடமை.
இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொள்வது எனது கடமையும் உரிமையும் ஆகும். மனிதர்களாக இருக்கின்ற அத்தனை பேரும் ஒன்றுதிரண்டு கூட்ட நோகத்தை வலியுறுத்த வேண்டும்.
மாற்றம் என்பது ஒரே நேரத்தில் நடந்துவிடாது. ஆனால் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து அதை வெளிப்படுத்த வேண்டும். அதுநம் கடமை” என்றார்.
(வீடியோ இங்கே )



