வடக்கு கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்க்க அனைவரும் ஆதரவு தாருங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பாகவும்,கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா விற்கு முன்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி செம்மணி வரை குறித்த பேரணி இடம்பெற உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உலக நாடுகள் தமது கவனத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 14 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. செம்மணி மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கணக்கான உறவுகள் எலும்புக் கூடுகளாக மீட்க படுகின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இது வரை எமக்கு தெரியவில்லை.
எமது பிள்ளைகள்,உறவுகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். எனவே எமக்கு சமூக செயல்பாட்டாளர்கள் ,தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எமக்கு குரல் கொடுக்க அணி திரண்டு வர வேண்டும்.நாங்கள் தனித்து போராடு கின்றமையினாலேயே எமக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதி கோரிய மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கவுள்ளது.
எனவே அனைத்து உறவுகளும் எமது சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



