வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் தொடர்கின்றன!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின்கீழும் பாதுகாப்புப்படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் பாதுகாப்புப்படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதுடன், மறுசீரமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தடைச்சட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பிரயோகிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கும் ஐ.நா கொண்டிருக்கும் உரிமையை மனித உரிமைகள் பேரவை மீளப்புதுப்பிக்கவேண்டும்.
அதேபோன்று மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கத்தக்க கொள்கைகள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அதனை முன்னிறுத்தி, குறிப்பாக கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான மாற்றமே அடையப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இன்னமும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளன.
இரா ணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பக்கூடியவகையில் அண்மையில் சிறுவர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோரின் மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குக் கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி இம்மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரக்கூடிய தடயவியல் நிபுணர்கள் உள்ளடங்கலாக சுயாதீன வல்லுனர்களின் பங்கேற்புடன் வலுவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேவேளை யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து ஒடுக்க முற்படும் பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளின் ஆளுகை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் குறையவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



