கனடாவில் தவறுதலாக சுடப்பட்டு கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்

கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான 21 வயது ஹர்சிம்ரத் என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது அங்கு இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றுள்ளன. அதேபோல சாலையின் மறுபக்கம் இரண்டு கார்கள் வந்து நிற்க, ஒருபக்கம் நின்ற கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார். இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட 32 வயது ஜெர்டைன் ஃபோஸ்டர். அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, North Yorkஇல் Obiesea Okafor என்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், மற்றவர்களையும் பிடிக்க பொலிசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



