இந்த நிலம் விற்பனைக்கு இல்லை"!

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி மன்னார் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, நகர வீதிகளில் சென்று மீண்டும் போராட்டக் களமான மன்னார் சுற்றுவட்டத்தை அடைந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனிய மணல் அகழ்விற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்வது மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள் வழங்காதிருத்தல் உள்ளிட்ட பல அடிப்படை கோரிக்கைகள் உள்ளடங்கிய, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஒரு மகஜரில், ஓகஸ்ட் 6, 7ஆம் திகதிகளில் ஏற்பாட்டுக் குழு மன்னார் மக்களிடம் கையெழுத்துக்களை சேகரித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மகஜரை மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "மக்களின் நிலம் மக்களின் உரிமை”, “மன்னார் மண்ணை பாதுகாப்போம்”, போன்ற கோசங்கள் எழுப்பப்பட்ட இந்த போராட்டம் இல்மனைட் கனிய மண் அழ்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி 'கருநிலம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாக, சுற்றுச்சூழல்சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் ஹேமந்த விதானகே கடந்த ஜனவரி மாதம் வெளிப்படுத்தியிருந்தார்.
"ஒரியன் என்ற நிறுவனமும், மாஸ் மெட்டல் அன்ட் மினரல்ஸ் என்ற நிறுவனமும், அவுஸ்திரேலிய நிறுவனமான இல்மனைட் சேன்ட்ஸ் என்ற மூன்று நிறுவனங்களும் இந்த நேரத்தில் தாது கனிய மணல் அல்லது இல்மனைட் அகழ்வதற்கான அனைத்து தயார்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன."
மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தின் முதல் நாளில் பங்கேற்ற மன்னாரைச் சேர்ந்த ஒரு இளைஞர், மன்னார் நிலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் ஏற்கனவே அந்த நிறுவனங்களால் பொதுமக்களின் ஆலோசனைகள் இன்றி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டவுடன், அவர்களுக்கு அகழ்வுக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அத்தகைய சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்கும் போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த பொது மக்களின் ஆலோசனைகள் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த இரண்டு நாள் போராட்டம் மூன்று அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"நாங்கள் இளையோராக மூன்று விடயங்களை முன்வைக்கின்றோம். கனிய மணல அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளும், வழங்கப்படவுள்ள அனுமதிகளும் இரத்து செய்யப்பட வேண்டும். மன்னார் பாதுகாக்கப்பட்ட கடல் பிரதேசமாகவும் பாதுகாக்கப்பட்ட சூழல் தொகுதியாகவும் அறிவிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பிலான விடயங்களில் மக்களின் கருத்துக் கணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்."
கனிய மண் அகழ்விற்காக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் ஆய்வுகளை நடத்த நவம்பர் 2024 மற்றும் மே 2025 இல் மன்னாருக்கு வந்த அரச அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களை மன்னார் மக்கள் திருப்பியனுப்பினர். உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு நில அளவை திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், மன்னார் மாவட்ட உதவி செயலாளர் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நவம்பர் 06, 2025 அன்று டைட்டேனியம் அகழ்விற்காக மாதிரிகளை எடுக்கும் நோக்கில், மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓலைத்தொடுவாய், வள நகர் பிரதேசத்திற்கு சென்றிறுருந்தது.
பாரியளவிலான கனிய மண் அகழ்விற்கான ஐந்து உரிமங்களைப் பெறுவதற்கு இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட டை்டேனியம் சேன்ஸ் (Titanium Sands) நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனேயே இந்த அதிகாரிகள் சென்றிருந்தனர்.
2024 நவம்பரில் கிடைத்த அனுமதிக்கு அமைய, இலங்கை முதலீட்டுச் சபையின் வெளிநாட்டு முதலீட்டாளர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒரியன் மினரல்ஸ் (தனியார்) நிறுவனமாகும். “முதலீட்டு சபையின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் பெரும் உதவியாக அமைந்துள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் ஒப்புதல் மற்றும் ஒரியன் பெயரில் அனுமதி வழங்கியமை ஆகியவை அகழ்விற்காக விண்ணப்பிப்பதற்கான வேகத்திற்கு உதவியது.
அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை தரும்,” என டைட்டேனியம் சேன்ட்ஸ் நிர்வாக பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் சியர்ல் கூறியுள்ளார். டைட்டேனியம் சேன்ட்ஸ் முதலீட்டில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் இரண்டு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாகும்.
வருடாந்தம் 150,000 தொன் கனிய மணலை அகழ்ந்து எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அகழ்வு தொடர்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவமுள்ள புவியியலாளர் டக் பிரைட் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக 122 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீடு செய்யப்படுமெனவும், இதன் மூலம் சர்வதேச அளவில் இல்மனைட் உற்பத்தியாளர்கள் ஊடாக 600 உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



