சம்பூர் மனித எச்சப் பகுதி ஒரு மயான பூமி அல்ல!

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜூலை 20 அன்று மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.
ஜூலை 30 ஆம் திகதிக்குள் அந்த இடத்தின் வரலாறு குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட மூதூர் நீதிபதி, அகழ்வாய்வு குறித்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
புதன்கிழமை (ஜூலை 30) வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைகுழி இருந்ததா அல்லது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பதை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித எலும்புகள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம தனது அறிக்கையில் மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். அந்த எச்சங்களுக்குரிய நபர்களின் மரணம், காயங்களினூடாக ஏற்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது ஏதாவது குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புபட்டவையா? என்பதை தீர்மானிக்க மேலும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்த MAG நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்திற்கு நிபுணர் அறிக்கையை வழங்குவதற்காக சட்ட வைத்திய அதிகாரி கள ஆய்வு நடத்தியுள்ளதாகவும், அந்த இடத்தில் பல மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டுள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டு நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரை, அந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் கூடுமாறு நீதவான எச். எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.
57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



