உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக கௌரவிப்பு

2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி.ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் மூலம் 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசிக்கள் மற்றும் கெளரவம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த சபாநாயகர் மாணவர்கள் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் பல வகையான வேற்றுமைகள் காணப்பட்டாலும் ஒற்றுமையே எமது பலம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 60 மாணவர்கள் எனும் அடிப்படையில் இரு வருடத்திற்கும் 360 மாணவர்களுக்கான பணப்பரிசில்கள் இன்று வழங்கப்படுகின்றது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டதன் பின்பு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் மக்களின் எழ்மையை ஒழிப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வருடம் 3500 மில்லியனுக்கு மேல் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளன என்றார்.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கருத்து தெரிவிக்கையில் மக்களுக்கான நலன் சார் சேவைகளை மக்கள் காலடிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தினுடாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிதி உதவி, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், காட்டு யானையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற பல சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



