மற்றுமோர் அரகலய! நேபாளத்தில் ஏன் இளைஞர்கள் கொந்தளித்தார்கள்?

நேபாள இளைஞர்களின் கடும் கொந்தளிப்பு காரணமாக பாராளுமன்றம், பிரதமர் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.
ஏன் நேபாள இளைஞர்களுக்கு இந்தளவுக்கு கோபம் ஏற்பட்டது? தங்களுடைய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகள் தங்களுடைய வரிப்பணத்தில் ஆடம்பர வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகள் ஆடம்பர சொகுசு வாழ்க்கை, அதிகரித்த ஊழல்கள், சமூக வலைத்தளங்கள் முடக்கம் என எல்லாம் சேர்ந்தே நேபாள இளைஞர்களை வீதியில் இறக்கியது. இளைஞர் சக்தி மாபெரும் சக்தி என்பதற்கு அமைய இன்று நேபாள அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி இராஜினாமா செய்திருகின்றார்.
நேபாள இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் தெருக்களில் மட்டும் இல்லாமல் இணையதளத்திலும் தெளிவாகக் காணப்படுகிறது. சமூக ஊடகங்களில் 'நெபோகிட்' என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நேபாள தலைவர்களின் குழந்தைகள் எவ்வளவு செல்வ செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நேபாள இளைஞர்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் காட்டுகிறார்கள். அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு கார்கள், பிராண்டட் ஆடைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
'சாமானிய மக்கள் உயிர்வாழப் போராடுகிறார்கள், ஆனால் தலைவர்களின் குழந்தைகள் எல்லா வசதிகளையும், ஆடம்பரங்களையும் அனுபவிக்கிறார்கள்' என்ற செய்தியை நேபாள இளைஞர்கள் வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது.
இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குத்தித்தனர். இந்த போராட்டம் வலுப்பெற்று ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு மாறியிருந்தது.
நேபாளத்தில் பேஸ்புக், யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு, செய்தி மற்றும் வணிகத்திற்காக சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதன் மீதான தடையே இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது.
நேபாளத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான மை ரிபப்ளிகா, அதன் தலையங்கத்தில், "ஜென் Z இளைஞர்களின் போராட்டம் சமூக ஊடகத் தடையைப் பற்றியது மட்டும் அல்ல. ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்துக்கு எதிரான மக்களின் கோபம் ஏற்கனவே இருந்தது.
சமூக ஊடகத் தடைக்குப் பிறகு அந்த கோபம் தெருக்களில் தெளிவாகக் காணப்படுகிறது. இந்தத் தடை ஒரு தீப்பொறியாக செயல்பட்டது" என்று எழுதியிருந்ததது. மேலும், "இளைஞர்கள் ஒரே நாளில் அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைத்துவிட்டனர்.
ஊழல் செய்யும் தலைவர்களின் குடும்பங்களின் ஆடம்பர வாழ்க்கை முறையால் நேபாள மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஒரே நாளில் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர், இதை புறக்கணிக்க முடியாது" என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



