ஊடகவியலாளரைத் தாக்கிய உள்ளூர் அரசியல்வாதியை கைது செய்ய 2 வாரங்கள் ஆகின!

உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்த, கிழக்கு மாகாண ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரை கைது செய்ய பொலிஸாருக்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுத்துள்ளன.
பிபிசி தமிழ் சேவையின் சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக்கை தாக்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர் உள்ளிட்ட இருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து (ஜூலை 15) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இருவரையும் தலா 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, பிரதேச ஊடகவியலாள்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு ஓகஸ்ட் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர் உள்ளிட்ட மூன்று பேர் தனது ஊடக அறிக்கையிடலைக் கேள்வி எழுப்பிய பின்னர், தன்னைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிபிசி தமிழ் சேவை சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக், ஜூலை 2ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இரண்டு தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் ஆகியோரின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். உவைஸ் ஜூலை 2 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ரியா மசூர் உள்ளிட்ட மூன்று பேரால் தான் தாக்கப்பட்டபோது, தன்னைக் காப்பாற்றியது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். உவைஸ் தான் என ஊடகவியலாளர் மப்றூக் தனது தொழில்முறை சகாக்களிடம் கூறியிருந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



