மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்குட்பட்ட தமிழர் கிராமங்களில் வனவள திணைக்கள அதிகாரிகளின் அடாவடித்தனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்துக்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவிலுள்ள நான்காம் கட்டைப் பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவோரின் குடிசைகளை வனவளத் திணைக்கள அதிகாரிகள் எரித்து அடாவடித்தனங்களை முன்னெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட் பட்ட புச்சாக்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை, வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளிலேயே வனவளத் திணைக்களத்தைச் சேர்ந்தோர் இந்த அடாவடித்தனத்தை முன் னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 13 குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்ச் செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த கச்சான், சோளன் விதைகளையும் வனவள திணைக் கள அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பரம்பரை பரம்பரையாக இப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையை இம்மக்கள் முன்னெடுத்து வந்துள்ளதுடன் யுத்த காலத் தின் பின் மீண்டும் பயிர்ச்செய்கையை சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் இப்பகு தியில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதிக்குள் நுழைந்த வனவளத் திணைக்கள அலுவலர்கள் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் மக்கள் சொந்தத் தேவைக்காக வெளியே சென்றிருந்த பகுதியிலுள்ள குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை, வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் இவ்வாறு சுமார் 13 குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. இதன்போது சைக்கிள்களில் கச்சான்களைக் கொண்டுவந்து தமது அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அப்பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்ய மறுத்தோர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட் டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டகளால் வாகரைப் பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட எம்.பி. கள், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரின் கவனத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, இது தொடர்பிலான தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு இது தொடர்பான முழுமையான அறிக்கையைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்தப் பகுதிகள் பிரதேச செய லகத்துக்குச் சொந்தமான காணிகளைக் கொண்ட பகுதியாகவுள்ளன என்பதை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் அப்பகுதிக்கு அவர் நேரடி விஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் நாட்டில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளினாலேயே உயிர் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு கண்டனம் தெரிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



