ஈராக்கில் பிரபலமான டிக்டாக் பெண் சுட்டுக்கொலை

#Death #Women #Social Media #GunShoot #Iraq #TikTok #celebrity
Prasu
2 weeks ago
ஈராக்கில் பிரபலமான டிக்டாக் பெண் சுட்டுக்கொலை

ஈராக்கை சேர்ந்த டிக்-டாக் பெண் பிரபலம் ஓம் பகத். பாப் இசைக்கு நடனமாடும் வீடியோக்களை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்தார்.

மேலும் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

இந்த நிலையில் ஓம் பகத், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் ஓம் பகத்தை நோக்கி சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.

ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. 

இக்கொலை தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஓம் பகத்தின் இயற்பெயர் குப்ரான் சவாதி. கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீடியோக்களில் பொது ஒழுக்கத்தை குறைக்கும் அநாகரீகமான பேச்சு இருப்பதாக கூறி ஓம் பகத்துக்கு 6 மாத சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.