மனித புதைகுழிகளால் நிரம்பிய இந்து சமுத்திரத்தின் முத்து - மு.தமிழ்ச்செல்வன்

இந்து சமூத்திரத்தில் கண்ணீர் துளி வடிவில் அமைந்துள்ள இலங்கைதீவு எலும்பு கூடுளால் நிரம்பிய தீவாகவும் காணப்படுகிறது. இந்து சமூகத்திரன் முத்து என அழைக்கப்படுகின்ற இந்த முத்துக்குள் புதைகுழிகள் நிரம்பியிருக்கின்றன.
அழகிய கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள்,மலைகள்.நதிகள், என அழகான பக்கங்கள் ஒரு புறமிருக்க மறுபுறம் புதைகுழிகளாலும் நிரம்பியிருக்கிறது. கண்ணீர் துளி வடிவில் உள்ள இத்தீவில் கண்ணீருடன் வாழும் மக்கள் அதிகம். தீவு முழுவதும் காணப்படுகின்ற மனித புதைகுழிகளில் இருந்து எடுக்கப்படும் எலும்பு கூடுகளால் அழுகின்ற மக்களை அதிகம் கொண்ட தீவாகவும் இலங்கை காணப்படுகிறது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம், மற்றும் கிளர்ச்சி காரணமாக இந்த தீவு முழுவதும் ஏராளமான மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இற்றைவரை சுமார் 23 வரையான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் ஏராளமான மனித புதைகுழிகள் தீவு முழுவதும் காணப்படுகின்றன.
இலங்கையை பொறுத்தவரை 1971 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழிகள். 2009 விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் தொடர்ந்தன. தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் அனைத்தும் ஜேபிவி கிளர்ச்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற மனித புதைகுழிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடையதாக காணப்படுகிறது.
மனித புதைகுழிகள்
மனித புதைகுழிகள் தொடர்பில் இன்று வரை மிகத் தெளிவான சர்வதேச ரீதியான வரைவிலக்கணங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் சம்பிரதாயபூர்வமாக, சட்டரீதியாக புதைக்கப்பட்டவர்களை தவிர வழமைக்கு மாறாக ஓரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்ட குழிகள், அகழிகள் என்பன பாரிய மனித புதைகுழிகளாக அடையாளம் காணப்படுகிறது. இவை யுத்தங்கள், இனப்படுகொலைகள்.மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் போது மறைக்கப்படும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனித புதைகுழிகளும் மேற்சொன்னவாறு கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல், அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கொலைகளால் ஏற்பட்டவை. ஆதாவது மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவை அல்லது சுடப்பட்டு கொலை செய்யப்பட்டவை என தடயவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
இலங்கையில் மனித புதைகுழிகள்
இலங்கையில் 2009 வரை ஏற்படுத்தப்பட்ட மனித புதைகுழிகள் என இன்றுவரைக்கும் சுமார் 23 பாரிய மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழிகள் நாடு முழுவதும் பரவலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள், வாக்குமூலங்களுக்கு அமைவாக அந்தந்த காலப்பகுதியில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் செம்மணி, யாழ்ப்பாணம் மிருசுவில்,கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம், கிளிநொச்சியில் பிரிதொரு மனித புதைகுழி, மன்னார் மாவட்டம் சதோச, மன்னார் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், குருநாகல் மாவட்டம் நிகரவபிட்டிய, கம்பகா மாவட்டம் மினுவாங்கொட,கம்பகா மாவட்டம் எஸ்செல்ல,கம்பகா மாவட்டம் நித்தம்புவ,கொழும்பு கோகந்தர, கொழும்பு பொல்கொட ஏரி, மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ, இரத்தினபுரி மாவட்டம் சூரியகந்த, மட்டகளப்பு, மாவட்டம் களுவாஞ்சிகுடி, மாத்தளை வைத்தியசாலை, கண்டி அங்கும்புர, மட்டக்களப்பு சத்துருகொண்டான், குருக்கள் மடம் ஆகியன காணப்படுகின்றன.
1994 ஆம் ஆண்டு இரத்தினபுரி சூரியகந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைகுழியிலிருந்து 48 சிறுவர்கள் உட்பட 300 க்கும் அதிகமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவ்வாறே 2012 ஆம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலையின் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் 155 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மன்னார் சதோச மனித புதைகுழியில் 350 இற்கு மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 2013 ஆம் ஆண்;டு கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் 88 க்கு மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1999 ஆம் ஆண்;டு கண்டுபிடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணியில் அப்போது 15 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இடம்பெற்றுள்ள இதுவரையான அகழ்வு பணிகளின் போது இன்றுவரைக்கும் 147 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை. செம்மணி பகுதியில் சுமார் 400 வரையானவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்னர் என கிருஷhந்தி படுகொலை வழக்கில் தண்டணை பெற்றுள்ள இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் சோமரட்ன ராஜபக்ச கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு புதுகுடியிருப்பு மனித புதைகுழியில் 9 மனித எச்சங்களும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 52 க்கு மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனித புதைகுழிகளும் அரசியல் தலையீடுகளும்
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் விடயத்திலும் அல்லது குறிப்பிட்ட இடத்தில் மனித புதைகுழிகள் காணப்படுகின்ற என்ற தகவல்களின் அடிப்படையில் அவற்றை அகழ்கின்ற விடயத்திலும் கடந்த காலங்களில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் இருந்தமையினை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் இவ்வாறான மனித புதைகுழிகள் விடயத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.என்பது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.
அரசியல்வாதிகள் அல்லது அவர்களுடன் நெருக்கமாக தொடர்புபட்டவர்கள் அல்லது பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பின் அகழ்வு நடவடிக்கைகள் கிடப்பில் போடப்படுவது. அல்லது தடுக்கப்படுவது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி மனித புதைகுழி விடயத்தில் அது விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நோக்கில் ஆரம்பத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்த போதும் பின்னர் அந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
காரணம் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து அதன் பின்னர் 2018 இல் மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த கருணா அம்மான் இச் சம்பங்களில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற காரணத்தால் களுசாஞ்சிகுடி மனித புதைகுழி விசாரணைகள் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டினர்.
அவ்வாறே 2013 இல் மாத்தளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளுக்கும் இடம்பெற்றது. மாத்தளை மனித புதைகுழி எச்சங்கள் 1980 களுக்கு பின்னரான காலப்பகுதியை சேர்ந்தவை என கிடைக்கப்பெற்ற தடயவியல் பொருட்களை வைத்து கூறப்பட்டடிருந்தது. மாத்தளையில் 1989, 1990 களில் மாத்தனை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தவர் கோத்தபாய ராஜபக்ச பின்னர் மாத்தளை புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட காலப்பகுதியில் இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
எனவே இந்த புதைகுழி விடயத்தில் உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தன்னுடைய சகோதரின் வகிபாகம் வெளியே வந்துவிடும் என்பதற்காக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெறுமனே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதனை வலுவிழக்கச் செய்தார் நீதிமன்ற விசாரணைகளுக்கும் தாமதங்கள் ஒத்துழைப்பு இன்மை என்பவற்றால் தடைப்பட்டது என மனித உரிமைகள் அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டது.
முக்கியமாக மாத்தளை உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் அனைத்து பொலீஸ் நிலையங்களிலும் காணப்பட்ட ஐந்து வருடங்களுக்கு முந்திய அனைத்து கோப்புகளையும் அழித்துவிடும்படி செய்யப்பட்டதாக கோத்தபாய ராஜபக்ச மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது.
இது போன்றே செம்மணி மனித புதைகுழி விடயத்திலும் கிருஷhந்தி படுகொலையுடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாணைகள் மேற்கொள்ளப்பட்ட போது செம்மணியில் 400 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச தெரிவித்த பின்னர் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அகழ்வு பணிகளும் விசாரணைகளும் நிறுத்தப்பட்டன.
அரசும் அதுசார்ந்த நிறுவனங்களும் நிதி ஒதுக்கீடு, செய்வது முதல் ஒத்துழைப்பு வழங்காமை வரை நடந்துகொண்டன. மாறாக தொடர்ந்தும் அகழ்வு பணிகளும் விசாரணைகளும் இடம்பெற்றிருப்பின் இராணுவ உயரதிகாரிகள் பலர் சிக்கிக்கொள்வார்கள் என்ற காரணத்தினால் இந்த நிலை ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இப்பொழுதே புதிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 147 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறே மிருசுவில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளிட்ட எட்டுபேர் கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்கவுக்கு 2020 இல் ஜனாதிபதி கோத்தபாய ராஜகபக்ச பொது மன்னிப்பு வழங்கினார்.
இதே போன்றே 1995 இல் கொழும்பு பொல்கொட ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட 21 சடலங்கள் தொடர்பில் அவர்களை கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் ஆஜராக தவறியதனால் வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி. சட்டமா அதிப்ர திணைக்களம் அன்றைய அரசியல் சூழ்நிலையில் சுயாதீனமாக இயங்க முடியாது காணப்பட்டன என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் விடயத்தில் இவ்வாறு அரசியல் தலையீடுகள் காரணமாக அவை தொடர்பான உண்மைகள் வெளிவராமலே அவையும் புதைக்கப்பட்டுள்ளன.
புதிய அரசின் மீதான நம்பிக்கை
இத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் அனைத்தும் தமிழ் மக்களினுடையதும், ஜேபிவியினுடையதுமே ஆகும். எனவே இந்த அரசு மனித புதைகுழிகள் விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நீதியான விசாரண நடத்தும் என்ற சிறு நம்பிக்கை காணப்படுவதாக பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த எல்லா அரசுகள் போன்றும் நீதிக்கு புறம்பாக தன்னுடைய படைகளையும் அதிகாரிகளையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு இறங்குமா என்ற சந்தேகமும் மக்களிடம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபியின் ஏராளமான தோழர்களும் மனித புதைகுழிகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் இன்றும் அவர்களிடம் உண்டு.
மனித புதைகுழியும் நீதியும்
இலங்கையை பொறுத்தவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் விடயத்தில் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிருப்பிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். மனித புதைகுழிகளுடன் தொடர்பு பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பல இராணுவு அதிகாரிகள் பின்னாட்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுசென்றுள்ளனர்.
பலர் விசாரணை வயத்திற்குள் வராமலே பதவி காலத்தை கழித்துவிட்டு சென்றுவிட்டனர். எனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதோடு, இந்த பாரிய மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனையும் கிடைக்கின்றபோதே இந்த அழகிய தீவில் அழுகைகளும் கண்ணீர்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைப்பதோடு. மீள் நிகழாமையும் உறுதி செய்யப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய உறவினர்களுக்கு உள்ள வலியும்,வேதனையும், அந்த உணர்வுகளையும் ஐனாதிபதி அநுர குமார திசாநாயவுக்கு யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை அவருடைய சகோதரணும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் ஒருவர்.
அப்போது அவரது தாய் பொலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியதனையும் அதன் வலிகளையும் அனுப்பவித்தவரே ஐனாதிபதி. எனவே அவரிடமிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனித புதைகுழிகள் தொடர்பில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



