இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

#world_news #Israel #Iran
Mayoorikka
1 month ago
இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையே நேரடி போர் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

 டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தியது. இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பில் இருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது.

 ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைக்கலாம் என கூறப்படுகிறது.

 ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. 

அந்த வகையில்தான் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்தால், ஈரானின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்தநிலையில் தான் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் தலைவர் உறுதி அளித்தும் இருக்கின்றார். இந்தப் பதற்றம் பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தும் அச்சம் காரணமாக உலகத் தலைவர்கள் அமைதி காக்கும்படி அழைப்பு விடுக்கும் நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

 ஏற்கனேவே ஈரான் எல்லையான காசாவில் ஆறு மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கும் சூழலில், பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஈரான் முதல் முறையாகவே இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தி இருந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் உட்பட மேற்கத்தேய அரசுகள் பதற்றம் தீவிரம் அடைவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தபோதும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர் அமைச்சரவையை திங்களன்று சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 எனவே இனி இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வைப் பொருத்து இரு நாடுகளுக்கிடையே நேரடி போர் மூளுமா? அல்லது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.