தனியார் கடன் வழங்குனர்களுடன் இணக்கப்பாடு விரைவில் எட்டப்படும்: நாணய நிதியம்

#SriLanka #IMF
Mayoorikka
1 month ago
தனியார் கடன் வழங்குனர்களுடன் இணக்கப்பாடு விரைவில் எட்டப்படும்:  நாணய நிதியம்

இலங்கை முன்னெடுத்துவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்டமாக வெளியகத் தனியார் கடன் வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, அவர்களுடன் பொருத்தமான இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (4) வொஷிங்டனில் நடைபெற்றது.

 இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிச்செயற்திட்டம் மற்றும் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலைத் தொடர்புப்படுத்தி வெளியாகும் செய்திகள் பற்றியும், சீனா உள்ளடங்கலாக உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. 

 அதற்குப் பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜுலி கொஸாக், 'இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச் செயற்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது. அதனூடாக 337 மில்லியன் டொலர் கடன் நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கைக்கும், நாணய நிதியத்துக்கும் இடையில் இரண்டாம் கட்ட மீளாய்வு தொடர்பில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது' என்று இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட உதவிச்செயற்திட்டம் பற்றிய அறிமுகமொன்றை வழங்கினார்.

 அதனைத்தொடர்ந்து இம்மீளாய்வைப் பணிப்பாளர் சபை அங்கீகரிப்பதற்கு இரண்டு விடயங்கள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை உரியவாறு நடைமுறைப்படுத்தல் மற்றும் நிதியியல் உத்தரவாதம் தொடர்பான மீளாய்வை நிறைவுசெய்தல் (கடன் மறுசீரமைப்பு) என்பனவே அவையாகும் என விளக்கமளித்தார். 'அம்மீளாய்வானது பல்தரப்பு பங்காளர்கள் இலங்கைக்கான தமது நிதியியல் பங்களிப்பைத் தொடர்வார்கள் என்ற உத்தரவாதத்தை உள்ளடக்கியிருக்கவேண்டும். அத்தோடு கடன் மறுசீரமைப்பிலும் போதிய முன்னேற்றம் அடையப்பட்டிருக்கவேண்டும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 'இலங்கையின் பேரண்டப்பொருளாதார கொள்கை மறுசீரமைப்புக்களின் விளைவாக நேர்மறையான சாதக மாற்றங்கள் தென்படுகின்றன. நிதியியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, தொடர் பணவீக்க வீழ்ச்சி, வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வு, பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப குறிகாட்டிகள் உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகள் அடையப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும். வலுவான நிதியியல் மறுசீரமைப்புக்களை அடுத்து அரசநிதி வலுவடைந்திருப்பதுடன், இம்மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடரவேண்டியது இன்றியமையாததாகும்' என்றும் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜுலி கொஸாக் வலியுறுத்தினார்.

 மேலும் 'கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்டமாக வெளியக தனியார் கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன், சர்வதேச உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அதேபோன்று கடன் மறுசீரமைப்பின் ஓரங்கமான உள்ளகக் கடன் மறுசீரமைப்பானது பெருமளவுக்கு முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மீளாய்வின் முடிவில் தனியார் கடன்வழங்குனர்களுடன் நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு ஏற்புடையவாறான இணக்கப்பாடு எட்டப்படும் என வலுவாக எதிர்பார்க்கப்படுகின்றது' என ஜுலி கொஸாக் நம்பிக்கை வெளியிட்டார்.