அனுரவை சந்தித்தமை குறித்து விளக்கம் கூறிய சுமந்திரன்!

#SriLanka #M. A. Sumanthiran #AnuraKumara
Mayoorikka
1 month ago
அனுரவை சந்தித்தமை குறித்து விளக்கம்   கூறிய சுமந்திரன்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 

 இந்தச் சந்திப்பின்போது ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்து அநுரகுமாரவுக்கு சுமந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு மற்றும் வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பு ஆகியவற்றில் பங்கேற்பதற்காகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (4) யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார்.

 இதன்போதே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பின்போது அநுரகுமார திசாநாயக்க, இந்தியா பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கின்றது. அங்கு இன ஒற்றுமை காணப்படுவதோடு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். அப்துல்கலாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். 

தற்போதைய ஜனாதிபதி கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.அவருடைய சுட்டிக்காட்டல்களை அவதானித்திருந்த நான், பின்னர் அவருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் சிறுபான்மை, மற்றும் நலிவுற்ற சமூகத்தினர் அவ்விதமான பதவிகளுக்கு வருவதற்கும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவுவதற்கும் காரணமொன்று உள்ளது எனக் குறிப்பிட்டேன். 

 அச்சமயத்தில் அநுர, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்தியாவில் அவ்விதமான நிலைமைகள் நிலவுவதற்கு அங்குள்ள அதிகாரப்பகிர்வு முறை ஒருகாரணமாக இருக்கின்றபோதும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது தான் என்ற விடயத்தினை குறிப்பிட்டேன்.

 அத்துடன், அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

 இதேநேரம், வடக்கு,கிழக்கில் உள்ள சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதோடு, தொடர்ச்சியாகப் பரஸ்பர கலந்துரையாடல்களை முன்னெடுப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது என்றார்.