இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட கால அவகாசம்!

#SriLanka
Mayoorikka
1 month ago
இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட கால அவகாசம்!

வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு எதிராக எழுத்துமூல ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இராணுவம் நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது.

 ஊடகவியலாளர் பி.நிரோஷ்குமார், தகவலறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியுள்ளது. இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை இராணுவம் வழங்க மறுத்ததன் காரணமாக ஊடகவியலாளர் பி. நிரோஷ் குமார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவலறியும் ஆணைக்குழுவில் மேல்முறையீடு செய்திருந்தார்.

 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி, இராணுவத்திடம் இருந்து நிரோஷ்குமார் கோரிய தகவல் மறுப்புக்கு எதிரான மேன்முறையீட்டை தகவல் அறியும் ஆணைக்குழு பரிசீலித்த போது, இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்திருந்தது. சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்த இராணுவத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக தகவலறியும் ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளதாக ஊடகவியலாளர் கூறுகிறார்.

 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக ஊடகவியலாளர் தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டுமென கோரி அதற்குரிய ஆவணங்களை மன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு தகலவறியும் ஆணைக்குழுவின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 ஊடகவியலாளர் பி. நிரோஷ் குமாருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம், தகவலறியும் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வழக்கில் அந்த ஆணைக்குழுவை ஒரு தரப்பாக சேர்க்கக் கூடாது என நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணையில் தகவலறியும் ஆணைக்குழுவையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய, ஆவணங்களை சமர்ப்பிக்க திகதி ஒன்றையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதோடு, மனுதாரர் அதற்கு எழுத்துமூல ஆட்சேபணையை தெரிவிக்கலாம் எனவும் கட்டளையிட்டது. எதிர்வரும் மே 21ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.