ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகிய மூவரையும் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க கடிதம்!

#SriLanka #Tamil Nadu
Mayoorikka
1 year ago
ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகிய மூவரையும் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க கடிதம்!


ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களினதும் நிலையையும்மிகுந்த கரிசனையுடன் அணுகி, தங்கள் பெரும்பகுதியை சிறையில் கழித்து, எஞ்சிய கடைசிக்காலத்திலாவது தங்களது குடும்பத்தினரோடு இணைந்து வாழவேண்டும் என்ற ஏக்கங்களோடு இருக்கும் இவர்களை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து வெளிப்பதிவு அகதிகளாகப் பதிவுசெய்வதற்கும், அவர்களது குடும்பத்தினருடன் இணைத்துவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் மூலம் கூட்டாக வேண்டுகோள்விடுத்துள்ளனர். 

 தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், விநோனோகராதலிங்கம், சி.வி.விக்கினேஸ்வரன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், தவராசா கலையரசன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 மறைந்த பாரத பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடகால சிறைவாசத்துக்குப்பின் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் நன்னடத்தையின்பால் விடுதலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகளான ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பப்படும் வரை நடமாட்டத்துக்கான கட்டுப்பாட்டுடன் வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தின்கீழ் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நால்வரில் ஒருவரான சாந்தன் போதிய மருத்துவ சிகிச்சையின்மையினால் கடுமையான உடல்நலக்குறைவுக்கு உட்பட்டு, ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முதுமையின் பிடியிலுள்ள தாயைக்காண தாயகம் திரும்பவேண்டும் என்ற தனது இறுதிக்கோரிக்கை நிறைவேறாமலேயே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மரணமடைந்தார்.

 ஏனைய மூவரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் இன்று வரை திருச்சி சிறப்பு முகாமில் சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ, பழகவோ, உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்த இவர்கள் விடுதலையின் பின்னர் சிறையில் இருந்த அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டுள்ளதால் கடுமையான மன உழைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் உட்பட்டு சாந்தனின் நிலையே தங்களுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

 விடுதலையின் பின்னர் இவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான். இருந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாதவாறு தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது அவர்களின் இத்தனை ஆண்டுகால எதிர்பார்ப்பையும், காத்திருப்பையும் பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. 

தங்களை இலங்கைத் துணைத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்லும்படி அனுமதிகோரி 15 மாதங்கள் கடந்தும், துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்த பின்னரும் ஏனைய மூவரினதும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமலிருப்பது ஈழத்தமிழர்களிடையே தமிழக அரசின்மீது எதிர் மனோநிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஜெயக்குமாருக்கு பார்வைக்குறைபாடு ஏற்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ஒரு கண்ணின் பார்வைத்திறனை அவர் முழுமையாக இழந்துள்ளார்.

 ரொபர்ட் பயஸ் இரத்த அழுத்தம், சிறுநீர் கல் மற்றும் முதுகுத்தண்டுவட வலி போன்ற தீவிர உடல் உபாதைகளுக்கு உட்பட்டுள்ளார். இந்நிலையில் 15 மாதங்களைக் கடந்த பின்னரும் அவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ அனுமதிக்காமல், தனிமைச்சிறையில் அடைத்துவைப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்பதில் தாங்களும் கரிசனை கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மேற்படி மூவரில் ஒருவரான ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டவர். அவரது குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருகின்றனர். 

எனவே அவரை சென்னையிலுள்ள அவரது குடும்பத்தினருடன் இணைப்பதற்கு தமிழக அரசின் பரிந்துரையே போதுமானது. ரொபர்ட் பயஸின் தாயார், தங்கை, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசித்துவருகின்றனர். அவரது மனைவி இலங்கையில் வசிக்கின்றார். எனவே அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் ஏதேனுமொரு நாட்டுக்கு அனுப்பிவைப்பதாயின் அதற்குரிய கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெறவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து வெளிப்பதிவு அகதியாக தங்கவைக்க நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதாகும். மற்றையவரான முருகன் லண்டனில் வசிக்கும் தனது மகளோடு இணைந்திருக்க வாய்ப்பளிக்கக்கோரி லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். 

அதற்கான தூதரக நேர்காணலுக்கு ஒப்புதல் கிடைத்தும் சிறப்பு முகாம் அலுவலர்களால் அவர் அழைத்துச்செல்லப்படவில்லை என்றும், தூதரகத்துக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்ற கோரிக்கையோடு ஒருவாரத்துக்கு மேல் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. எனவே மேற்படி மூன்று ஈழத்தமிழர்களினதும் நிலையையும் தாங்கள் மிகுந்த கரிசனையுடன் அணுகி, தங்கள் பெரும்பகுதியை சிறையில் கழித்து, எஞ்சிய கடைசிக்காலத்திலாவது தங்களது குடும்பத்தினரோடு இணைந்து வாழவேண்டும் என்ற ஏக்கங்களோடு இருக்கும் இவர்களை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து வெளிப்பதிவு அகதிகளாகப் பதிவுசெய்வதற்கும், அவர்களது குடும்பத்தினருடன் இணைத்துவைப்பதற்கு ஆவணசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!