போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரள கருணா அழைப்பு.

#SriLanka #Protest #people
Lanka4
1 month ago
போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரள கருணா அழைப்பு.

மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது உங்களது கட்சியினுடைய செயற்பாடு கிழக்கில் தான் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட தரப்பாக வடக்கில் முக்கியமாக முல்லைத்தீவு , கிளிநொச்சி, வவுனியாவே காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் ஏன் இதுவரை காலமும் உங்கள் கட்சி பிரயோகம் வடக்கில் இருக்கவில்லை? என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

பலதரப்பட்ட மக்களின் கேள்வியும் இதுவே, கிழக்கு மாகாணத்தில் அடித்தளத்தை பலப்படுத்திய பின்பு தான் வடக்கிற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றே தலைவரின் கட்டளை. அவ்வாறு இருந்தும் அன்பின் இல்லம் என்ற அறக்கட்டளையின் ஊடாக கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கான உதவிகளை கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் வழங்கியிருக்கின்றோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுஜேட்சையாக நாம் களமிறக்கியிருந்தோம். 

வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை தலைவர் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.

மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட தலைவர் எனக்கொரு கட்டளையிட்டிருக்கின்றார். ஏனென்றால் நாட்டுக்காக கஸ்ரப்பட்டு அது பலனளிக்கவில்லை என அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் போராட்ட தியாகிகள் தான். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கூறியுள்ளார். இதற்கான அறைகூவல் ஒன்று தலைவரால் விடப்படும். இனிவரும் காலங்களில் வடக்கில் எங்களது வேலைத்திட்டங்களை உணர கூடியதாக இருக்கும் என்றார்.

போராளிகள் உங்களுடன் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? என வினவிய போது, தற்போது இருக்கின்ற கால சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கின்றது. 1980, 1990 களில் நாட்டு விடுதலைக்காக போராடுவோம் என்று கூறியதும் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு போராட போனதே அந்த வாழ்க்கைமுறை. தற்போது தேவைக்கேற்ப ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். 

போராளிகள் தொன்றுதொட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கஸ்ரப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போராடியதை தவிர எந்தவித தவறும் செய்யவில்லை. இன்றும் பிச்சை எடுத்துக்கொண்டு , அடுத்த நேர சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாது இருக்கிறார்கள். இதற்காகவே தலைவர் கனவுத்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளார். அதாவது விழுப்புண்கள் அடைந்து, வறுமை கோட்டிற்கு கீழுள்ள போராளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான முயற்சி ஒன்றினை தலைவர் மேற்கொண்டு வருகின்றார். அதனை விரிவாக்கி வடக்கிலும் , கிழக்கிலும் மையப்படுத்தி அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படும்.

 ஒரு போராளி தலைவனின் சொல்லை கேட்டு கண்டிப்பாக வருவான். இனத்துக்காக இந்த மண்ணிற்காக போராடிய போராளிக்கு உண்மைகள் அனைத்தும் தெரியும். 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணா அம்மானாக தளபதி வந்து அழைக்கும் போது கண்டிப்பாக வருவார்கள் வந்து எமது கரத்தை பலப்படுத்துவார்கள் என மேலும் தெரிவித்தார்.