நிகழ்நிலை சட்டமூலம் தொடர்பில் அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பியுள்ள டிரான் அலஸ்!

#SriLanka #America #government #Social Media
Mayoorikka
5 months ago
நிகழ்நிலை சட்டமூலம் தொடர்பில் அமெரிக்காவிடம்   கேள்வி எழுப்பியுள்ள  டிரான் அலஸ்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் விமர்சிப்பதற்கு முன்னர், அது தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் அதில் எந்தெந்த சரத்துக்களில் ஜனநாயகத்துக்கு சவாலாகவும், ஊடகங்களை ஒடுக்குவதாகவும் அமைந்துள்ளன என்பதை அமெரிக்கா குறிப்பிட வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணிந்து யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்றும், இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலென் குறித்த சட்டம் தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். 

நாட்டில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவரும் இது தொடர்பில் பேசியிருக்கின்றார். இதில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன என்பது பற்றியும் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் மாத்திரமின்றி நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இதுபோன்ற கருத்துக்களையே கூறிக் கொண்டிருக்கின்றனர்.

 அண்மையில் எதிர்க்கட்சி அரசியல் தலைவரொருவர் இது தொடர்பில் என்னிடம் கூறிய போது, இந்த சட்டத்திலுள்ள எந்தெந்த சரத்துக்கள் ஜனநாயகத்துக்கு முரணானவையாகக் காணப்படுகின்றன என்பதைக் கூறுமாறு கேட்டேன். அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. 

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறிழைப்பவர்கள் மாத்திரமே இதற்கு அஞ்ச வேண்டும். அதனை விடுத்து பிரதான ஊடகங்களுக்கோ, நாட்டின் ஜனநாயகத்துக்கோ எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படாது. யுக்திய சுற்றிவளைப்புக்கள் யுக்திய சுற்றி வளைப்புக்களை முன்னெடுப்பதற்கு எனக்கு வேறு எந்த தரப்பினரதும் ஆதரவு தேவையில்லை. 

காரணம் இந்த செயற்திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னுடன் இருக்கின்றார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது என்பதற்காக இதனை நிறுத்த முடியாது. 

எமது இலக்கை அடையும் வரை எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணிந்து யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்த மாட்டோம். பொலிஸ்மா அதிபர் விவகாரம் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். 

எனினும் அரசியலமைப்பு பேரவை மற்றும் இந்த நியமனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும். எவ்வாறிருப்பினும் நாட்டில் அமைதியும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் இவரே பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.