தமிழரசுக் கட்சியின் தேர்தல் சொல்லிச் சென்ற பாடம் என்ன?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் நடைபெற்று அதன் தலைவராக சிவஞானம் சிறிதரன் தேர்வாகியிருக்கின்றார்.
போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் இருவர் தோவியை தழுவியுள்ளனர். இதில் மூன்றாவதாக போட்டியிட்ட கிழக்குமாகாண முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஒரு வாக்கெண்ணும் இல்லாமல் பூஜ்ய நிலையில் தோல்வியுற்றுள்ளார். அவருடைய வாக்கு சிறிதரனுக்கே வழங்கபப்ட்டுள்ளது.
அவர் தேர்தலில் கடைசி நேரத்தில் சிறிதரனுக்கே தனது ஆதரவு என வெளிப்படையாக கூறியிருந்த நிலையில் அவர் செயலிலும் காட்டியுள்ளார். இந்தநிலையில் இரண்டாவதாக தோல்வியுற்ற சுமந்திரன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதோடு சிறிதரனுடன் இணைந்து செயற்பட தயார் என தேர்தலின் பின்னர் கூறியிருந்தார். இது எந்தளவிற்கு சாத்தியமானது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தத் தேர்தலினைப் பொறுத்தவரை பெரியளவிளான குழப்பங்கள் இன்றி முடிவடைந்திருக்கின்றது. இந்தநிலையில் மூன்று வேட்பாளர்களது நேர்மைத்தன்மையும் அமைதியான தன்மையினையும் பாராட்டியே ஆகவேண்டும். இது ஏனைய தேர்தல்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடும் கூட என அரசியல் அவதானிங்கள் கருதுகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக இருந்த வழித்தோன்றல்கள் பரம்பரை கட்சி போன்ற செயற்பாடுகளில் தமிழ்க் கட்சிகள் இருந்து வரும் நிலையில் சற்று மாறுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடாத்தி இலங்கையின் மற்றைய கட்சிக்களுக்கு தமிழரசுக் கட்சி ஒரு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி தேர்தலைப் பொறுத்தவரை பல வெளித் தலையீடுகள் காணப்பட்டாலும் அத்தனையும் சமாளித்து ஒரு ஜனநாயக ரீதியில் தேர்தலை நடாத்திருக்கின்றார்கள். சட்டமும் தேசியமும் முட்டி மோதிக்கொண்டுள்ள நிலையில் தேசியம் வெற்றியடைந்திருப்பது எதிர்கால தமிழ் மக்களுக்கு ஒரு தென்பைக் கொடுத்துள்ளதோடு மக்கள் எதை விரும்புகின்றார்கள் தமிழ் கட்சி உறுப்பினர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ளது.
இது இப்படி இருக்க தலைவர் பதவியை ஏற்றுள்ள சிறீதரனுக்கு பாரிய பொறுப்பு இந்த சமூகத்தின் மத்தியில் உள்ளது. முதலில் அவர் கட்சியை அனைவருடனும் இணைந்து பலப்படுத்தி மறுசீரமைப்புக்களை செய்ய வேண்டும். வெறுமனே கட்சி ஆதரவாளர்களையும் தொண்டர்களைகளையும் திருப்திப்படுத்த நினைக்காமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனினைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் மாத்திரமே அவரால் நின்று பிடிக்க முடியும்.
தம்மைத் தவிர தமிழ்தேசியத்திலும் விடுதலைப் புலிகளுடனும் இணைந்து செயற்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை என கூறித் திரிய வேண்டிய அவசியம் இனி அவருக்கு ஏற்படாது. அவர் எதிர்காலத்தில் சுதந்திரமாக செயற்படலாம்.
இந்தியாவுடன் இணைந்து இந்தியாவை எப்படி கையாளலாம் என நினைத்து அவர்களின் மூலமாவது தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்க முற்பட வேண்டும்.



