ஜனாதிபதியிடம் பிரச்சினைகளை எடுத்துக்கூற அனுமதி வழங்கவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு!
இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்பமேலனத்தினர் இன்றைய தினம் (10.01) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில், “கடந்த வாரம் கிளிநொச்சி பகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளில் சம்மேளனத்தினரையும் அழைத்திருந்தார்.
விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விதமான விடயங்களை கதைப்பதற்காக அங்கு சென்றிருந்த பொழுது, ஜனாதிபதியிடம் தமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு எவரும் அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எதற்காக ஜனாதிபதி எம்மை அழைத்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த வருடங்களை விட இவ்வருடம் பல்வேறு வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடம் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்கள் மழையின்மையால் தண்ணீர் இன்றி பெரிதும் அவதி உற்றனர். பின்னர் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாகவும், தத்தி நோய் தாக்கம் காரணமாகவும் நெற்செய்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, தற்பொழுது ஏற்பட்டுள்ள சீறற்ற காலநிலை காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு விவசாயக் காப்புறுதி திணைக்களம் இது வரையில் எந்த பகுதிக்கும் சென்று அழிவு தொடர்பாக பார்வையிடவில்லை. அழிவு ஏற்பட்டிருந்தால் அதற்கு விவசாயக் காப்புறுதி பெற்றிருந்தால் மாத்திரமே அழிவுக்காண கொடுப்பணவு கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்பொழுது பெரும் போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 12 மூட்டைகள் மாத்திரமே அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இந்நிலை தொடரும் ஆயின் விவசாய செய்கையை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.