ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்லும் உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்!
உடுப்பிட்டி மதுபானசாலைக்கெதிராக நிரந்தர நடவடிக்கை எடுக்கா விட்டால் நான்கு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதியின் நிகழ்வுக்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு கவனயீர்ப்பை நடத்துவோம் என முன்னாள் வடமாகாண உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் உடுப்பிட்டி மதுபானசாலையை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றபின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுப்பிட்டி மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள். முதலில் பொதுஅமைப்புகள் ஒன்றிணைந்து பிரதேச செயலாளருக்கு அந்த இடத்தில் மதுபானசாலை வேண்டாம் எனக் கூறி கடிதம் கொடுத்திருந்தார்கள்.
அதற்கு பின் எல்லோரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை செய்து ஆர்ப்பாட்டத்தினூடாக அதனை நிறுத்தும்படி வலியுறுத்தியிருந்தார்கள். அதனை தொடர்ந்து மூடி வைக்கப்பட்டிருந்த மதுபானசாலையை திடீரென திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அந்த சிபாரிசினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் வழங்கியதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். அதன் பின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து அந்த மக்களுடைய கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டு பின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே வேண்டுமென்றால் மக்கள் நீதிமன்றுக்கு போகலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீதிமன்றம் போவது சம்பந்தமாக மக்கள் முடிவெடுப்பார்கள்.
ஆனால் நீதிமன்றம் போவதற்கு முதலே அதிகாரிகளால் இதனை நிறுத்த முடியும். இதனை நிறுத்துவதனால் எந்தவிதமான பாதிப்புகளும் யாருக்கும் வரப் போவதில்லை. கிராமசேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், மக்கள் பிரதிநிதிகள், ஆளுநர் என்று பல்வேறு தரப்புகளுக்கும் மகஜர் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை.
ஏன் இவ்வளவு பொறுப்பானவர்களும் மதுபானசாலைக்கு ஆதரவாக நிற்கின்றார்கள் என்பது தெரியவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இந்த மதுபானசாலைக்கு உரிய அனுமதியை இரத்து செய்யுங்கள் என்று கோரியிருந்தால் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் கொடுத்திருக்க மாட்டார்.
இதனையடுத்து மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் எழுதியிருக்கிறார்கள். நாளை நடைபெறவுள்ள யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உடுப்பிட்டி மதுபானசாலைக்கெதிராக நிரந்தர நடவடிக்கை எடுக்கா விட்டால் நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.
இதில் ஏதோ ஒரு நாள் மக்கள் எல்லோரும் திரண்டு அவரது நிகழ்வுக்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு கவனயீர்ப்பை நடத்துவோம். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று இதற்கொரு சரியான முடிவினை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.