நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உண்டு - ரணில்!
இந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புப் படையிடம் உள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனவாதம் மற்றும் மத அடிப்படையில் எவரேனும் தனித்தனியாக செயற்பட முயற்சித்தால் அது நாட்டின் அடையாளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.
தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பீடத்தின் கெடட்களை நியமித்து கலைக்கும் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை இராணுவம் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும், அதன் பெருமையை பேணுவது அதில் இணைந்துள்ள அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
தனக்கு கீழ் உள்ள அனைவருக்கும் அஞ்சாத தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகள் மற்றும் பெண் உத்தியோகத்தர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதுடன், இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டிற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.