நாங்கள் கோழைகள் அல்ல: சீண்டினால் விளைவு பாரதூரமானதாக இருக்கும்! பசில் எச்சரிக்கை
விமர்சனங்களை கண்டு பொறுமையாக இருப்பதால் எம்மை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம்.
கொவிட் பெருந்தொற்று தாக்கம்,பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2016 ஆம் ஆண்டு பாரிய சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டு பாரம்பரியமான அரசியல் கட்சிகளை வீழ்த்தி சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெற்றோம்.

ராஜபக்ஷகளுக்கு எதிராக கடந்த ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சகல வன்முறைகளையும் மக்களாணையுடன் வெற்றிக் கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.
பொதுஜன பெரமுனவே பலமான அரசியல் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆட்சியில் உள்ளபோதும்,ஆட்சியில் இல்லாத போதும் நாங்கள் எவர் மீதும் வைராக்கியம் கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அரசியல் பழி தீர்க்கப்பட்டது.எமது கட்சி ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இவற்றுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. 30 வருடகால பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து பஸில் ராஜபக்ஷர்களே நாட்டை அபிவிருத்தி செய்தார்கள்.இந்த உரிமையை எவருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.சமூக வலைத்தளங்களில் எம்மீது சேறு பூசப்படுகிறது.
நாங்கள் பல விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகிறோம்.
விமர்சனங்களை கண்டு அமைதியாக இருப்பதால் எவரும் எம்மை கோழைகள் என்று கருத கூடாது. சிங்கத்தை சீண்டினால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.எமது அரசியல் எழுச்சி அடுத்த ஆண்டு உறுதிப்படுத்தப்படும் என்றார்.