பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்: அவதானமாக இருக்க எச்சரிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போன்று காட்டிக் கொண்டு நிதியுதவி வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் சிறுவர்களுக்கான புத்தகங்களை வழங்குவதாகவும் கூறி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமைப்பில் உறுப்பினராக சேர மக்களிடமிருந்து கட்டணமாக ரூ.600 வசூலித்துள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவன அதிகாரியாகத் தன்னைக் காட்டி மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தமைக்காக சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் கட்டணம் என ஏமாற்றி வசூலித்த ரூ. 26,000 பணத்துடன் அத்திமலே, கெமுனுபுர பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், அவர் கூட்டுறவு கிராம வங்கியில் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 136,000 பெற்று அதை வங்கியில் வைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளாக வேடமணிந்து பொதுமக்களை ஏமாற்றி ரூ.70,300 பணத்தை பெற்றுக்கொண்ட சியம்பலாண்டுவ, மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர்.
சந்தேகநபர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிதி மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.