43 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், சென்ட்ரல் மெயில் எக்ஸ்சேஞ்சில் சந்தேகத்திற்கிடமான பல பார்சல்களை ஆய்வு செய்துள்ளனர்த.
இதன்படி போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பொதிகள் சோதனைக்காக திறக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பார்சல்களை பரிசோதித்த போது, தோராயமாக 2,193 எக்ஸ்டசி மாத்திரைகள் (மெத்தாம்பெட்டமைன்), 1 கிலோகிராம் 740 கிராம் ‘குஷ்’ கஞ்சா மற்றும் 29 கிராம் ஆம்பெடமைன் ஆகியன காணப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகள் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனியில் இருந்து கொழும்பு, மஹரகம, பத்தரமுல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள வெவ்வேறு முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானவை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 43 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போதைப் பொருட்கள்சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.