200 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டும் கிடைத்த கலைப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு!
நெதர்லாந்து காலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்து நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் இன்று கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
06 கலைப்பொருட்கள், ஒரு கில்டட் ஸ்கபார்ட், ஒரு சில்வர் ஸ்கபார்ட், ஒரு கில்டட் கத்தி, இரண்டு பெரிய துப்பாக்கிகள் (சுவர் துப்பாக்கிகள்) மற்றும் ஒரு பீரங்கி என்பவனவாகும்.
இந்த பொருட்கள் 1765 இல் நெதர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ரிஜ்க்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

இவை கண்டியில் உள்ள அரச அரண்மனையிலிருந்து டச்சுக்காரர்களால் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த ஆறு தொல்பொருட்களையும் இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் விசேட சந்தர்ப்பமாக இந்த 06 தொல்பொருட்களையும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்க நெதர்லாந்து அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
இந்தக் கலைப் பொருட்கள் இன்று 5 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.