இவ்வாண்டு 21,000 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது - கடற்படை
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சுமார் 21,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 20,576 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 715 கிலோகிராம் 509 கிராம் ஹெரோயின் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் பெறுமதி 17,887 மில்லியன் ரூபாவாகும். மேலும், 3641 கிலோகிராம் 15 கிராம் கேரள கஞ்சாவும் 50 கிலோகிராம் 288 கிராம் உள்ளூர் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த போதைப்பொருளின் பெறுமதி 1,456 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது. 10 கிலோகிராம் 755 கிராம் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 95 மில்லியன் ரூபாவாகும்.
அத்துடன், இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடற்படையினரால் 1,127 மில்லியன் ரூபா பெறுமதியான 140 கிலோகிராம் 993 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருளுடன் 14 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு பாகிஸ்தானியர்களும், ஆறு ஈரானிய பிரஜைகளும், ஆறு இந்திய பிரஜைகளும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.