முல்லைத்தீவில் விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11) காலை 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவிற்கொள்ளுவதற்கு ஏற்பாடாகி கொண்டிருந்த வேளை, இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 12 பொதுமக்கள் உயிரிழந்திருந்தார்கள்.
இந்த மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தாய்த்தமிழ் உறவுகள் நினைவேந்தல் அமைப்பு மற்றும் தாய் தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவப்படங்கள் ஒட்டிசுட்டான் சிவன் ஆலயம் முன்பாக வைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன் பொதுமக்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



