யானைப் பசிக்கு சோளப்பொரி போலவே புதிய பாதீடு!
எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய பாதீட்டில் நாட்டு மக்களை ஏமாற்ற நினைப்பதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில்வேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
“இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும்.
மக்கள் நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட பாதீட்டில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை.
யானை பசிக்கு சோளப்பொரி என்ற கதை போல் அவரது பாதீடு அமைந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பாதீடுகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

மாறாக இவர்கள் தனியார் நிறுவனங்களை வளைத்து போடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கவுமே திட்டங்களை கொண்டு வருகின்றார்கள். இந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தை திருப்திபடுத்துவதற்காக இந்த புதிய பாதீட்டை தயாரித்துள்ளதே தவிர மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிக்கவில்லை.
நாட்டின் உயர்நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமை அடைந்தமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே காரணம் என தெட்டத்தெளிவாக தீர்ப்பளித்திருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த பொருளாதாரத் திட்டங்கள் அனைத்துமே அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருக்கவில்லை.
மாறாக அவை மேல்வர்க்கத்தினரை திருப்திபடுத்தும் கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன.
எனவே, மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி உள்ளது” என்று தெரிவித்தார்.