சுவிட்சர்லாந்தில் பருவகால மாற்றத்தை எதிர்க்கும் மசோதா

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #லங்கா4 #சட்டம் #சுவிஸ் #Swiss Law #Tamil News #Swiss Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
சுவிட்சர்லாந்தில் பருவகால மாற்றத்தை எதிர்க்கும் மசோதா

சுவிட்சர்லாந்தை 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரலாக மாற்றும் மசோதா, வலுவான பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், கருத்து கணிப்பு நிறுவனமான ஜிஎஃப்எஸ்.பெர்ன் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஆதரவு தற்பொழுது 63% ஆக குறைந்துள்ளதை காட்டுகிறது.

 சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய கட்சியும், வலதுசாரி கட்சியுமான சுவிஸ் மக்கள் கட்சி, இந்த மசோதாவை நிராகரிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது. 

மேலும், அக்கட்சி இந்த மசோதா பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து வருகிறது. காலநிலை மாற்றங்களின் காரணமாக 2001 மற்றும் 2022 வருடங்களுக்கிடையில் பனி அளவுகளில், மூன்றில் ஒரு பகுதியை சுவிஸ் ஆல்ப்ஸ் மலை இழந்தது.

 இதனால் எரிசக்தி உற்பத்தியை குறைப்பது மற்றும் மோசமான பருவகால மாற்றத்தை எதிர்கொள்வது அவசியம் என்பதை மசோதாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 பணக்கார ஆல்பைன் நாடான சுவிட்சர்லாந்து, அதன் எரிசக்தி தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது. பயன்படுத்தும் அனைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது.

 தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள பருவநிலை பாதுகாப்பு சட்டம், எரிசக்தி ஆற்றலில் புதுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் பற்றியதாகும். இது சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் வழி செய்கிறது.

images/content-image/1695380993.jpg

 சுவிட்சர்லாந்தில் 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நுகர்வுகளையும் மொத்தமாக தடைசெய்வதற்கான மக்கள் வாக்கெடுப்பிற்காக, பனிப்பாறை முன்முயற்சி என அழைக்கப்படும் காலநிலை ஆர்வலர்களின் முயற்சிக்கு மாற்றாக இந்த சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது.

 அரசாங்கம் தடை யோசனையை புறக்கணித்தது என்றாலும் அந்த முன்முயற்சியின் பிற கூறுகளை உள்ளடக்கிய ஒரு எதிர் திட்டத்தை உருவாக்கியது. 

எரிவாயு மூலமாகவும் எண்ணெய் மூலமாகவும் இயங்கும் வெப்பமாக்கல் அமைப்புகளை, காலநிலைக்கு உகந்த மாற்றுகளுடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மற்றும் வணிகங்களை பசுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி நகரச் செய்யவும், ஒரு பத்தாண்டு கால அளவில் 2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதியுதவி வழங்குவதாக இதன் உரை உறுதியளிக்கிறது. 

சுவிஸ் மக்கள் கட்சியை தவிர சுவிட்சர்லாந்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன. அக்கட்சி மட்டும் இது "மின்சாரத்தை வீணடிக்கும் சட்டம்" என நிராகரித்து, அந்நாட்டின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ் இதற்கெதிரான வாக்கெடுப்பைத் தூண்டியது. இக்கட்சியின் நிலைப்பாட்டின்படி, காலநிலை நடுநிலையை கால் நூற்றாண்டுக்குள் அடைவதற்கான இந்த மசோதாவின் இலக்கு, புதைபடிவ எரிபொருள் தடையை குறிக்கும் என்றும் இது எரிசக்தி அணுகலை அச்சுறுத்தும் என்றும் மேலும், இதனால் வீட்டு மின் கட்டணங்களும் உயரும் என்றும் எச்சரிக்கிறது.

 கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக இக்கட்சி 2021ல் வெற்றிகரமாகப் போராடியது. ஆனால் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசு வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை குறைத்தாக வேண்டிய ஒரு உந்துதலில் செயல்பட்டு கொண்டு வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில், பெரிய வணிகங்களுக்கான வரி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் வாக்கெடுப்பு நடத்தப்படும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுகளுக்கான அமைப்பின் (OECD) தலைமையில் சுவிட்சர்லாந்து இணைய வேண்டுமானால், பன்னாட்டு நிறுவனங்களுக்கான உலகளாவிய குறைந்தபட்ச வரி விகிதம் 15% என இருக்க வேண்டும். 

750 மில்லியன் யூரோக்களுக்கு ($808 மில்லியன்) மேல் வருவாய் கொண்ட, சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய வரி விகிதத்தை விதிக்கும் திட்டத்தை 73 சதவீத வாக்காளர்கள் ஆதரிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இப்போது வரை, சுவிட்சர்லாந்தின் 26 மண்டலங்களில் பல, உலகிலேயே மிகக் குறைந்த கார்ப்பரேட் வரி விகிதங்களில் சிலவற்றை விதித்துள்ளன. இதற்கான காரணங்களாக, அதிக தொழிலாளர் ஊதியம் மற்றும் அதிகரிக்கும் இருப்பிடச் செலவுகளை அந்நாடு கூறி வருகிறது. 

இந்த புதிய துணை வரிவிதிப்பின் மூலம், முதல் ஆண்டில் மட்டுமே வருவாய் 1 பில்லியன் முதல் 2.5 பில்லியன் பிராங்குகள் வரை இருக்கும் என்று சுவிஸ் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. 

சர்வதேச நிறுவனங்களை தொடர்ந்து ஈர்ப்பதற்கு மேலும் முயற்சிகள் தேவைப்படும் என பெர்ன் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தை ஒரு கவர்ச்சிகரமான வணிக பிரதேசமாக மாற்ற கூடுதல் வரி வருமானத்தில் ஒரு பகுதியை பயன்படுத்துவதற்கும் அது முன்மொழிந்துள்ளது.