சனாதனம் பற்றி சாலமன் பாப்பைய்யா அவர்களின் ஆதார விளக்கம்.

#Lifestyle #Lanka4 #தொழில் #work #லங்கா4 #வாழ்க்கை #life
Mugunthan Mugunthan
8 months ago
சனாதனம் பற்றி சாலமன் பாப்பைய்யா அவர்களின் ஆதார விளக்கம்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா அளித்துள்ள விளக்கத்தில், "சனாதன தர்மத்திற்கும், திருக்குறளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 

திருவள்ளுவர் அப்படி எந்த சொல்லையும் பயன்படுத்தவில்லை. சனாதன தர்மம் என்பது குல கல்வியை வலியுறுத்துவதாகும். அதாவது ஒரு பரம்பரையை சேர்ந்த மூதாதையர்கள் என்ன தொழில் செய்தார்ளோ, அதையே அவருக்கு பிறகு வரும் தலைமுறையினரும் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாகும். 

ஆனால் திருவள்ளுவர் அதை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ​பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் திருவள்ளுவர் தெரிவித்துள்ளார். அதாவது எந்த உயிரும் பிறப்பால் உயர்ந்ததும் கிடையாது, தாழ்ந்ததும் கிடையாது. ஆனால் அவரவர் செய்யும் தொழிலில் மாறுபாடு உள்ளது.

 அதே போல் எவர் செய்யும் தொழிலும் தாழ்வானது கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று தான் பாரதி முதல் அனைவரும் தெரிவித்துள்ளனர். சனாதன தர்மம் வலியுறுத்தும் குல கல்வியின் அடிப்படையில் தான் இன்றும் நடைபெற வேண்டும் என்றால் பல திறமையாளர்களை நாம் இழந்திருப்போம்.

அந்தண குலத்தில் பிறந்த எத்தனையோ பேர் திறமையான நல்ல நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உள்ளனர். ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேர் உயர்வான பதவியில் இருக்கிறார்கள்.

 மகாபாரதத்தில் சனாதன தர்மம் வலியுறுத்தியதன் விளைவு என்ன ஆனது? குல கல்வியை, குல தொழிலிலை காரணமாக சொல்லி தான் கர்ணன் எத்தனையோ திறமைகள் இருந்தும் தேரோட்டியின் மகன் என இழிவுபடுத்தப்பட்டான்.

 பல அவமானங்களை சந்தித்தான். குலதொழிலை தான் ஒருவன் செய்ய வேண்டும் என்பது சனாதனம். ஆனால் யாரும் எந்த தொழிலையும் செய்யலாம். தொழிலில் ஏற்ற, தாழ்வு கிடையாது. 

ஒவ்வொருக்கும் அவரவர் செய்யும் தொழில் தான் தெய்வம். திறமை தான் செல்வம். ஒருவரின் பாட்டனார் செய்த தொழிலை தான் அவரது பரம்பரையில் வந்தவர்களும் செய்ய வேண்டும்.

 அதை விட்டு வெளியே செல்லக் கூடாது என சொல்வது இந்த காலத்திற்கு எப்படி ஏற்றதாக இருக்கும்? சனாதன தர்மம் என்றால் என்னவென்று முதலில் விபரம் அறிந்தவர்கள் தெளிவாக அனைவருக்கும் விளக்கி சொல்ல வேண்டும். 

அப்படி சொன்னால் அதற்கு பிறகு அதை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் கருத்து சொல்வது சரியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் இவர்கள் இழுத்து தங்களுக்கு ஆதரவு தேடிக் கொள்கிறார்கள்.

 ஆனால் சனாதன தர்மம் பற்றி ஒரு வார்த்தை கூட திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அப்படி அவர் சனாதன தர்மத்தை வலியுறுத்தி இருந்தால் அவருக்கு இவ்வளவு பெயரும், புகழும் கிடைத்திருக்காது. திருக்குறளுக்கும், சனாதன தர்மத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது" என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.