திரு. நாதன் கந்தையாவின் - நாங்கள் சேர்ப்பில்லை. கவிதை

#Poems #Lanka4 #technology #தொழில்நுட்பம் #லங்கா4 #கவிதை
Mugunthan Mugunthan
7 months ago
திரு. நாதன் கந்தையாவின் - நாங்கள் சேர்ப்பில்லை. கவிதை

நாங்கள் சேர்ப்பில்லை.
 ****************************

விண்முட்ட விஞ்ஞானம்

வினைத்திறனாய் ஆராய்ச்சி

செவ்வாயில் குடியமர

சிறப்பான திட்டமிடல்

கல்லுக்குள் இருக்கும்

கனிமத்தை அகழ்ந்தாய்ந்து

பொன்னாய் திரவியமாய்

பொதுவாக்க பெரும் திட்டம்.

 

புல்லுக்கு வயதென்ன

பூண்டுக்கும் உணர்வுண்டோ

நத்தைக்கும் எறும்புக்கும்

சித்தங்கலங்காமல் 

மெத்தப்படித்த பலர்

சுற்றி நின்று நடைப்பயிற்சி

குளிர் நடுங்கும் தெரு நாய்க்கு

கோட்டை கட்ட ஒரு திட்டம். 


நில்லாமல் நெடு வழியும்

நீண்ட நேய மனம்.

நல்லோர் புதிய யுகம் 

நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்

நாங்கள் அதில் சேர்ப்பில்லை

ஓசோனில் ஓட்டை 

உலகெங்கும் மாநாடு

 தென் துருவ பனி கரைய

 திகைப்புடனே ஆய்ந்தறிவு

 பல நூறு ஆண்டு - முன்

 செத்த படு குழிக்கு

 மெத்த நூதனமாய் 

அகழ்வாய்வு ஒரு பக்கம்.


 நல்லாய்த்தான் இருந்தாலும்

 நாங்கள் அதில் சேர்ப்பில்லை,


 பூவுக்கும் காம்புக்கும்

 நோகாமல் பிடுங்கி எழ

 நூறுக்கும் மேலான

 நிபுணர் குழு கூட்டம்.

 காட ழிக்கக்கூடாது. 

கடல் அழியக்கூடாது.

 காட்டு விலங்குகளும்

 கவலை கொள்ளக்கூடாது.,


 நல்லாய்த்தான் இருந்தாலும் 

நாங்கள் அதில் சேர்ப்பில்லை, 


போர் செய்யக்கூடாது

புகை கூட ஆகாது

மாடிக்குடியிருப்பில் 

மண் தூசு ஆகாது

கூவி குழந்தைகளை

குலைய வைக்க கூடாது 

தாயும் குழந்தைகழும்

சங்கடம் கொள்ளாகாது,

ஐநா அறிக்கையது

அரசுகளின் கொள்கையது


நல்லாய்த்தான் இருந்தாலும்

நாங்கள் அதில் சேர்ப்பில்லை. 


 கொத்துக்குண்டுகளும்

 கோர ரசாயனமும் 

நித்தம் மனுவுடலை

 நின்றழிக்கும் நஞ்சுகளும் 

சித்தம் கலங்கிவிடும் 

செயல் கொண்ட 

அணு குண்டும் 

எத்திக்கும் தடை செய்வோம்

 எதிற்பவரை அழித்திடுவோம்,

 வாய் பேச்சும் வரைவுகளும் 


 நல்லாய்த்தான் இருந்தாலும்

 நாங்கள் அதில் சேர்ப்பில்லை,


 சுட்டு வீழ்த்திய என்

 விடலைமகன் தலை மீது

 சப்பாத்து கால் வைத்து

 தண்டோரா ஒருபக்கம்.


 நட்ட நடு இரவில்

 நடந்து ஊர்போன

 முத்தையா குடும்பம்

 செத்து மடிந்த கதை.


 குட்டி பெற இருந்த

 குஞ்சம்மா குடல் கிழிந்து

 கக்கி கரு நசிந்து

 ரத்தச்சகதியிலே தெருவோரம்.


 செத்துவிழுந்த தாயின்

 சிதைந்த உடலத்தை

 தெருவோரம் விட்டு

 விடை பெற்ற 

 பெருந்துயரம்,


 செத்த தாய் முலையில்

 சிதறிய தலையுடனே -பசி

 மெத்த எடுத்த பிஞ்சு

 பால் குடித்த பரிதாபம்,


செத்து பலர் நாட்கள்

 பதுங்கி இரு குழியில்

 ரத்தம் மலம் சகதி -மொத்தம்

 கலந்த நீர் குடித்து 

பசி தீர்த்த அநியாயம், 


 கொத்துக்கொத்தாக

 குஞ்சு தாய் தகப்பன்

 மொத்த பரம்பரையும் 

செத்து கருகிய துயர வரலாறு,


 எல்லாம் எம் தலையில் 

எவரும் இதில் சேர்ப்பில்லை, 


 - நாதன் கந்தையா-