தொண்டமானிடம் இருந்து வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

#India #SriLanka
Mayoorikka
10 months ago
தொண்டமானிடம் இருந்து வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் கிழக்கு மாகாண ஆளுநரும் , சிறீலங்கா அரசின் தீவிர ஆதரவு அரசியல்வாதியமான செந்தில் தொண்டமான் அவர்கள் இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்ச்சியை ஊடகங்களில் பார்த்தபோது எமது தலைவர்களின் ஆளுமை குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.

 இந்திய தேசத்தின் அதிகார வீச்செல்லையை தமிழகம் என்ற எல்லைக்குள் நாம் சுருக்கி விட முடியாது. 29 மாநிலங்கள் 08 யூனியன் பிரதேசங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அகன்றதொரு மாபெரும் அரசியல் சாம்ராஜ்யமே இந்தியா என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால்தான் இந்திய தேசத்தில் எமது அரசியல் பணிகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்ற புரிந்துணர்வுக்கு வர முடியும்.

 இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் முழுமையான ஆதரவோடு, தமிழகத்தின் அண்டைய மாநிலங்கள் தொடக்கம், இந்தியாவின் உள்ள பிற மாநிலங்களுக்கு எமது பிரச்சினைகளை அவர்களின் மொழியிலேயே முழுமையாக எடுத்துக்கூறி எமது அரசியல் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை ஈழத் தமிழ் சமூகத்திற்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 உண்மையிலேயே எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தை கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆதரவு திரட்ட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பில் இருந்து தாயகத்தில் உள்ள எமது அரசியல் ,சிவில் சமூகத் தலைவர்களும் சரி ,புலம்பெயர்ந்த எமது அமைப்புக்களும் சரி ஒரு புள்ளியைக் கூட நகர்த்தவில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

 இங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நபர்கள் மட்டும் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தங்களால் முடிந்த கருத்தூட்டல் பணிகள செய்வதையும் நாம் மறந்துவிடக் கூடாது.ஆனால் இவர்களும் சரியான அதிகார மட்டங்களில் இந்தப் பணிகளை செய்யவில்லை என்றாலும் ஏவாத ஏவுகணையை விட அடிக்கப்பட்ட ஆணி சிறந்தது என்பது போல் ஏதோ தங்களால் முடிந்ததை பேசுகிறார்கள்.

 இந்த விடயத்தை நான் சுட்டிக்காட்டும் போது சில ஊடக நண்பர்கள் கூறினார்கள் தமிழர்கள் வாழும் தமிழகத்தையே ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக கையாளத் தெரியாத எமது தலைமைகள் எப்படி இந்தியாவில் உள்ள பிற மொழி பேசும் ஏனைய மாநிலங்களைக் கௌயாள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எமது தலைமைகளின் பலவீனங்களை நன்கு புரிந்து கொண்ட நண்பர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

 உண்மையில் எமது தலைவர்கள் செந்தில் தொண்டமான் மற்றும் ஜீவன் தொண்டமான் ,மனோ கணேசன் போன்றவர்களின் ஆதரவோடு தமிழர் தாயத்திலே ஒரு பயிற்சி பட்டறையை ஒழுங்கு செய்து அங்கு வசீகரமான தொடர்பாடல் அணுகுமுறையை எவ்வாறு பின்பற்றுவது , ஊடகங்களை எவ்வாறு அணுகுவது மேலும் இலங்கை என்ற அரசியல் எல்லைக்கு வெளியே எல்லைகள் கடந்து பிறதேசங்களில் அரசியல் ஆதரவை எவ்வாறு பரவலாக வலுப்படுத்துவது போன்ற சில விடயங்களில் பயிற்சி எடுப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

 ஆனால் ஏற்கனவே அரசியல் தீர்வு திட்டத்திலும், இனஅழிப்புக்கான நீதியிலும் கொள்கை ரீதியாக தளம்பலோடு இருக்கும் எமது தலைவர்கள் கொள்கை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருக்கும் மலயகத்தின் அரசியல்வாதிகளான செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் போன்றவர்களிடம் இனத்தின் கொள்கை விடயத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று எந்தவொரு விடயத்தையும் இவர்களிடம் அறிந்து கொள்வதற்கான அவசியமும் இருக்காது என்று நினைக்கின்றேன்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பெயரில் தான் தொழிலாளர் உள்ளது ஆனால் சிறீலங்கா தேசத்திற்காக இரவையும், பகலாக்கி உழைக்கும் எமது மலையக சொந்தங்களின் இரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதிகளின் காலடியில் பதவி சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த தலைவர்களிடம் ஈழத் தமிழ் சமூகத்தின் உரிமைகள் பற்றி பேசுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் எதுவுமே இல்லைத் தானே.....

 நமக்கான அறிவு நண்பர்களிடம் மட்டுமல்ல எதிரிகளிடமும் துரோகிகளிடமும் கூட விலைபோகாமல் கற்றுக் கொள்ள முடியும் அந்த வகையில் இந்த தொண்டமான் அரசியல் படையினரிடம் எதை கற்றுக் கொள்ளலாம் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்று புரிந்து கொண்டால் சரி....

 நன்றி

 சண் மாஸ்டர்