அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

அமெரிக்காவின் பென்ஸில் வேனியா மாநிலத்திலுள்ள நகரம் பிலடெல்பியாவில் நேற்று மாலை நடந்து துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என கூறியுள்ள பிலடெல்பியா காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அடையாளங்களோ அல்லது வேறு கூடுதல் விவரங்களோ எதுவும் வெளியிடவில்லை.
உள்ளூர் நேரப்படி, நேற்றிரவு இரவு 08:30 மணியளவில் பிலடெல்பியாவின் கிங்ஸெஸிங் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாரிங்டன் அவென்யூவில் உள்ள 5700-வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறைந்தது 8 பேர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. பாதிக்கப்பட்ட 6 பேர் பென் பிரெஸ்பிடேரியன் மருத்துவ மையத்திற்கும், 2 பேர் பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியான 4 பேரின் உடல்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் மிகெல் டோரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஃப்ரேஸியர் (South Frazier) தெருவில் உள்ள 1600-வது பிளாக்கிற்குப் பின்னால் உள்ள சந்துப் பாதையில், அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய ஒரு நபரை காவலில் எடுத்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கூடுதல் வெடிமருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்தார்.
உள்ளூர் செய்திகளின்படி, சுடப்பட்டவர்களில் குறைந்தது 2 சிறுவர்களும் அடங்குவர். துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகம் (Gun Violence Archive) அளிக்கும் தகவல்கள்படி, 4 நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் மட்டுமே இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் குறைந்தது 339 முறை நடந்திருக்கிறது.
இதுகுறித்து டுவிட்டரில் பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி, “தென்மேற்கு பிலடெல்பியாவில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச் சூடு குறித்த செய்தி திகிலூட்டுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்அடைந்தவர்களின் குடும்பத்தினருடன் என் இதயம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். இந்த அபாயகரமான வன்முறை நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதே வேளை, கைது நடவடிக்கையின் போது காவல் துறையினர் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அவர்களிடையே பெரும் கவலையை தோற்றுவித்திருக்கிறது.



