நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

நண்பர்களுக்கு குட்பை சொல்லி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துட்டுகெமுனு மாவத்தை பிரதேசம், நாத்தாண்டிய மைலாவ பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், முல்லேரியா ஹிம்புதான பதுமக பிரதேசத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 28 வயதுடைய புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் காலி முகத்திடல் போராட்டத்தில் முதல் கூடாரம் அமைத்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (18) உயிரிழந்த இளைஞன், தான் இறந்துவிடுவதாக பல நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதனைப் பார்த்த மஹரகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உயிரிழந்த இளைஞன் தனது சகோதரனுடன் தற்காலிகமாக தங்கியிருந்த ஹிம்புதான பத்தமக பிரதேசத்திலுள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு கதவு மூடியிருப்பது தெரிந்தது.
மேலதிக சாவி உள்ளதா என வீட்டின் உரிமையாளரிடம் வினவியபோது, இறந்தவரிடம் அந்தச் சாவி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுத்தியலால் கதவை உடைத்துவிட்டு பார்த்தபோது , அவர் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி இளைஞனை முல்லேரிய வைத்தியசாலைக்கு கொண்டு வந்து வைத்தியர்கள் பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரண்டு வகையான வலிநிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகள் அடங்கிய பல அட்டைகள், ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் படுக்கையில் லைட்டர் ஆகியவற்றை பொலிசார் கண்டுபிடித்தனர்.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் குறித்து வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



