குரங்குகள் சீன பரிசோதனைக் கூடங்களில் சித்திரவதை அனுபவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்!

டோக் குரங்குகள் சீன பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படவும் அங்கு சித்திரவதை அனுபவிப்பதற்குமான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க, குரங்கு ஏற்றுமதி தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
"ஒரு முன்னாள் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக நான் இதை முற்றாக எதிர்க்கிறேன். இது ஒரு அருவருக்கத்தக்க கருத்தில் கொள்ளத் தேவையில்லாத செயல்", என முன்னாள் அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
"இந் நடவடிக்கை இலங்கையின் தாவர விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கையில் பாதுகாக்கப்பட்டு வரும் உள்நாட்டு உயிரினங்களை இவ்வாறு ஒட்டுமொத்தமாக இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது", எனவும் கூறி தனது எதிர்ப்பை வெளிக்காட்டினார்.
"உயிரியல் பூங்காக்களுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டங்களுக்கு மட்டுமே அவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட முடியும், மேலும் அவை ஆய்வகங்களுக்குச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை நன்கு அறிந்திருப்பது மனிதாபிமானமற்றது.
அவை அழகான விலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் சுற்றித் திரிந்து முழு வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து உரிமையும் அவைக்கு உண்டு" என அவர் தெரிவித்திருந்தார்.



