இன்றையவேத வசனம் 11.04.2023: நீ எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து

நீ எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (#சங்கீதம் 32:7).
இந்தக் காலகட்டத்தில் நமது ஒன்றிணைக்கப்பட்ட இந்தியத்திலும், உலகின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவை விசுவாசிக்கிற மக்கள் எல்லாவிதத்திலும் அநியாயமாய் தாக்கப்படுவதை, கொலை செய்யப்படுவதை பார்க்கிறோம்.
நடக்கிற இக்காரியங்களைப் பார்க்கும்போது நமக்கு மேலே சொல்லப்பட்டுள்ள, என்றும் அழியாத தேவ வார்த்தை ஆறுதலாக இருக்கிறது.
ஒரு பக்கம் பிசாசானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரமே இருக்கிறது என்றும், வெகு சீக்கிரத்தில் அவன் முற்றிலும் அழிக்கப்பட்டு போவான் என்பதையும் அறிந்து அதிவேகமாய் செயல்பட்டு வருவதையும்,
இன்னொரு பக்கத்தில் பரிசுத்த வேதாகமத்தை பல்வேறு விதத்தில் வசனங்களை தங்களுக்கு ஏற்றபடி பிரித்து போதிக்கும் கயவர்களையும்,
தேவனுடைய நாமத்தில் ஏழைகளுக்கு நன்மை செய்பவர்களை தாக்குப்பவர்களையும் நாம் காண்கிறோம்.
எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்பதை சற்றும் அறியாதபடி சத்துருவானவன் வெள்ளம் போல வருவதைப் பார்க்கிறோம்.
உண்மை கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட குடும்ப சமூக வாழ்க்கையிலும் அவர்கள் செய்யும் தொழில் வியாபாரத்திலும் பல சங்கடங்களை ஏற்படுத்தி அவர்களை விசுவாசத் தினின்று வழுவி போகச் செய்ய முயற்ச்சிக்கிறான். எனினும், என் அன்பு சகோதர, சகோதரிகளே! மனம் கலங்காதீர்ங்கள்! வேதம் இவ்விதமாக கூறுகிறது,
வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். (ஏசாயா 59:19)
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைகளுக்கு பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்கு திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். (ஏசாயா 25:4)
ஆம், சகோதர, சகோதரிகளே இந்த தேவ வார்த்தைகளின் படி அவர் நமக்கு அடைக்கலமாய் இருக்கிறார். ஆகவே, நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் தைரியமாய் இருப்போம். விழித்திருந்து ஜெபத்தில் தரித்திருப்போம். கர்த்தர் தாமே நமக்கு அரணாக இருப்பாராக. ஆமென்!! அல்லேலூயா!!!



