ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய புத்தரிசி விழா

#Ranil wickremesinghe #Anuradapura #New Year #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்திருந்ததோடு, விவசாயத்தின் மூலம் நாடு தன்னிறைவு பெறவும், விளைநிலங்கள் செழிப்பாக இருக்கவும், சுபீட்சமிக்க பொருளாதாரம் ஏற்படவும் பிரார்த்தனை செய்தனர்.

புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, முதலில் ஜய ஸ்ரீ மஹாபோதியை வழிபட்டு ஆசி பெற்றார்.

அநுராதபுரம் சிங்கத்தூணுக்கு அருகிலிருந்து புறப்பட்ட புத்தரிசி ஊர்வலம் ஸ்ரீ மஹா போதியை வந்தடைந்தது.

அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்ப ஆரம்பித்ததுடன், அனைத்து மாகாணங்களிலும் இருந்து கொண்டு வரப்பட்ட அரிசியால் தங்கப் பாத்திரம் நிரப்பப்பட்டது. மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்துக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக வழங்கப்படும் தேன் பூஜைக்கான, தூய தேன் பானை உருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு நெய் பூஜைக்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய் பாத்திரமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய நெல் விவசாயிகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சிந்தன விலேகொட, ஜனாதிபதியின் வயதுக்கு நிகரான நெற்கதிர்கள் நிறைந்த நெல் மூட்டையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கினார்.

9 மாகாணங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு அந்தந்த பிரதேசங்களுக்கு பிரத்தியேகமான விதைகள் மற்றும் நெல் வகைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.

56 ஆவது தேசிய புத்தரிசி விழா நினைவு இதழின் டிஜிட்டல் அச்சுப்பிரதிகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

ருவன்வெலி சைத்தியராமாதிபதி ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் வண, ஈத்தலவெடுனு வெவே ஞானதிலக தேரர், லங்காராம விகாராதிபதி வண, ரலபனாவே தம்மஜோதி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமாக சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!