தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரான ஓமானியரை தாக்கிய பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கட்டான, ஹல்பே, கோபியாவத்தை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் உரிமையாளரின் வீட்டிற்கு சந்தேகநபர்கள் மூவர் வந்து தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் சியான் திசேரா முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இரு சந்தேக நபர்களும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கட்டான பகுதியில் வசிப்பவர்கள். தொழிற்சாலைக்குள் வாடகை அடிப்படையில் வாகனம் பிரவேசிப்பது தொடர்பான தகராறே இந்த தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஓமன் பிரஜையும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



