மட்டக்களப்பில் தொல்பொருள் தேடிய பிக்கு மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் கைது

கரடியனாறு, மாவடியோடை பிரதேசத்தில் தொல்பொருட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று இராணுவ வீரர்களும் பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி பழங்கால பொருட்களை தேடி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம், டேப் இயந்திரம் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவர்கள் வந்த வண்டியொன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.



