கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு! -படங்கள் இணைப்பு
.jpg)
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பேரூந்து நிலையத்தினை திறந்து வைத்தார்.

வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வட மாகாணத்தில் முதன்முறையாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண சபைக்கே உரித்தான கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமே இன்று இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வில் அதிதிகளாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் S.M சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன், உள்ளூராட்சிஅமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் , இந்நிகழ்வில் பிரதிப் பொலிஸ்மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர்கள், கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து சங்க தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்கள், வட மாகாண மாவட்டங்களின் தனியார் பேருந்து சங்கங்களின் உறுப்பினர்கள், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.



