பண்டாரவளை மண்சரிவு: பத்து வீடுகள் முற்றாக அழிவு: 7 பேர் மீட்பு

பண்டாரவளை லியங்கஹவெல கபரகல பிரதேசத்தில் மண்சரிவினால் சுமார் பத்து வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவற்றுக்கு அடியில் புதையுண்ட 7 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் இந்த மேட்டில் புதைந்துள்ளார்களா என்பதை கண்டறியும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்மேடு சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கிராம மக்களை மீட்க பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழு அந்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
லியாங்கஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உடனடியாக இங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பூனாகலை கபரகல தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்ட செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் மாற்று இடங்களை வழங்காவிடின், தோட்டத் தொழிலாளர்களை வைத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட முகாமையாளரின் இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.



