இன்றைய வேத வசனம் 18.03.2023: சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்

#Bible #today verses #SriLanka #Lanka4 #Holy sprit
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 18.03.2023:  சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்

நண்பர்களே, இவ்வுலகில் நாம் வாழும் நாட்களில் அநேக சூழ்நிலைகள் வழியாய் கடந்து போகிறோம்.
சில சூழ்நிலைகள் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது. பல சூழ்நிலைகள் துன்பத்தையும், வேதனையையும் கொண்டு வருகிறதாய் இருக்கிறது.

அப்படியான வேதனையின் பாதையில் நாம் செல்லும்போது, நம் உள்ளம் ஒரு ஆறுதலான வார்த்தைக்காகவும், தேறுதல் கொண்டு வரும் ஒரு துணைக்காகவும் ஏங்கும்.

இது மனிதர்களுக்குள் இருக்கும் பொதுவான ஓர் இயல்பு. காரணம், தேவன் நம்மை உறவுகளை எதிர்பார்க்கும், மனித உறவுகளை விரும்பும் ஆத்துமாக்களாகத்தான் வடிவமைத்திருக்கிறார். 
நாம் தனித்து முழு ஜீவியத்தையும் வாழ்வதுதென்பது மிகவும் கூடாத ஓர் காரியம். உதாரணமாக, என் வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தைச் சொல்கிறேன்.

என்னுடைய கல்லூரி நாட்களில், கல்லூரிக்கு பல மருத்துவ நிறுவனங்கள் வேலைக்கென்று மாணவர்களை நேர்காணல் செய்யும் படி வந்தார்கள்.

கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பதாகவே, வேலையைப் பெறக்கூடிய ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. மிகுந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் நேர்காணலில் நான் பங்கு பெற்றேன்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் என் பெயர் சொல்லப்படவில்லை. என் உள்ளம் உடைந்து மிகவும் வேதனையாக இருந்தது.

என் பெற்றோர் முடிவுகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களே! நான் எப்படி எனக்கு வேலை கிடைக்கவில்லையென்று அவர்களிடம் சொல்வேனென்று எனக்குள் ஒரு போராட்டமாக இருந்தது.
அந்நேரத்தில் என் அம்மாவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. என் காரியத்தை அவர்கள் என்ன சொல்வார்களோவென்று கண்ணீரோடு விவரித்தேன்.

ஆனால் என் அம்மாவின் வார்த்தைகளோ, போராட்டக்களமாக இருந்த என்னுள்ளத்தில் சமாதானத்தைக் கொண்டு வந்தது.

"கவலைப்படாதே! இது இல்லையென்றால் உலகம் ஒன்றும் முடிந்து விடாது. உனக்கென்று இருக்கும் வேலை, இதிலும் சிறந்த வேலை நிச்சயமாக உனக்கு கிடைக்கும். துவண்டுவிடாமல் முயற்சி செய்து முன்னேறிப்போ!' என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது.
என் அன்பு சகோதர, சகோதரிகளே! ஒரு மனிதனுடைய வார்த்தை நமக்கு ஒரு ஆறுதலையும், சமாதானத்தையும் கொண்டுவருமேயானால், ஆறுதலின் தேவனாகிய நம் கர்த்தரின் வார்த்தைகளும், அவர் பிரசன்னமும் எப்படிப்பட்டதான பேராறுதலை நமக்குக் கொடுக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். 

மட்டுமல்ல, நம்முடைய தேவையின் நேரங்களில் மனிதர்கள் நம்மோடு இருப்பதில்லை. ஆனால் வேதத்தில், "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” ( யோவான் 14:16 ) என்று வாசிக்கிறோம். 

பாருங்கள், என்ன ஓர் அருமையான வாக்குத்தத்தம்.
ஆம் நண்பர்களே, பரிசுத்த ஆவியானவர் ஆறுதல்தரும், தேற்றரவாளனாக எப்பொழுதும் நம்மோடு இருக்க விரும்புகிறார். அவர் நம்மோடு ஓர் நேச உறவில் காலத்துக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஒருவேளை, இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள் வேதனையின் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கலாம். கவலைப்படாதேயுங்கள்! தேவன் உங்களுக்கு மிகவும் அருகில் இருக்கிறார். 

உங்கள் உள்ளத்தின் கதவை திறந்து, இந்த ஆறுதலின் தேவனாகிய இயேசுக் கிறிஸ்துவை அனுமதிப்பீர்களா! அவர் தேற்றரவாளனாக அனுதினமும் உங்களோடு இருக்க விரும்புகிறார்! ஆமென்!! அல்லேலூயா!!!